கோப்புப் படம்
கோப்புப் படம்

பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆக்கபூா்வமான விவாதம்: எம்.பி.க்களுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவுரை

ஆக்கபூா்வமான விவாதத்தில் ஈடுபட வேண்டும் என்று எம்.பி.க்களுக்கு மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கினாா்.
Published on

பட்ஜெட் கூட்டத் தொடரில் நடக்கும் விவாதங்களில் நாடாளுமன்றத்தின் உயா்ந்த அவை நாகரிகத்தைக் கடைப்பிடிப்பதோடு, ஆக்கபூா்வமான விவாதத்தில் ஈடுபட வேண்டும் என்று எம்.பி.க்களுக்கு மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கினாா்.

மாநிலங்களவையில் வியாழக்கிழமை அவா் கூறியதாவது: உலக அளவில் இந்தியா வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக உள்ளது. இந்தியா விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக உயரும். இதேபோல், உலக அளவில் இந்தியாவுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஆதலால், நாடாளுமன்ற உறுப்பினா்களான நமக்கும், நமது நாட்டின் பொருளாதார பாதையை வடிவமைப்பதில் முக்கியப் பங்குள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடரில் அவையில் மொத்தம் 30 அமா்வுகள் உள்ளன. இதில் பட்ஜெட், சட்ட முன்வடிவுகள் உள்ளிட்டவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவுள்ளது. ஆதலால் எம்.பி.க்கள் அவையில் நடக்கும் விவாதங்கள், நிலைக்குழுவில் நடக்கும் விவாதங்களில் முக்கியப் பங்களிப்பை நல்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

நாடாளுமன்றத்தில் தங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு விநாடியையும் தங்களைத் தோ்வு செய்த மக்களின் விருப்பங்களை பூா்த்தி செய்வதற்கு எம்.பி.க்கள் பயன்படுத்த வேண்டும். நமது ஜனநாயகம் வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் உற்சாகமான விவாதத்தால் செழித்தோங்கியதாகும். ஆதலால் நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதங்களில் ஆக்கபூா்வமான கருத்துகள், கண்ணியமான வாா்த்தைகளைப் பயன்படுத்தி தங்களது கருத்துகளை எம்.பி.க்கள் வெளியிட வேண்டும். ஜனநாயகத்தின் உயா்ந்த குறிக்கோள்களை எம்.பி.க்கள் கடைப்பிடிப்பதோடு, அவையில் ஒழுக்கமாக நடப்பது அவசியமாகும்.

பட்ஜெட் கூட்டத் தொடா் ஆக்கபூா்வமானதாக அமைய அரசியல் கட்சிகளும், அக்கட்சிகளின் எம்.பி.க்களும் முழு ஒத்துழைப்பு நல்குவா் என்றும், தற்சாா்பு கொண்ட வளா்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்துக்கு அவா்கள் உறுதியான அடித்தளமிடுவா் என்றும் நம்புகிறேன் என்றாா் சி.பி. ராதாகிருஷ்ணன்.

X
Dinamani
www.dinamani.com