

இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 0.11 விமான நிலையங்கள் எனும் விகிதத்தில் மட்டுமே விமான சேவைச் செயல்பாடு இருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கை 2026 தரவுகள் மூலம் அறிய முடிகிறது.
சர்வதேச அளவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் உலகளவில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ள போதிலும், இதே விகிதமானது, உலக வல்லரசான அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு 47.35 என்ற விகிதத்திலும், அண்டை நாடான சீனாவில் 10 லட்சம் பேருக்கு 0.39 என்ற விகிதத்திலும் உள்ளது, இந்தியாவைவிட வளர்ச்சியில் முன்னணியில் இருப்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை(ஜன. 29) தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில், இந்தியாவில் செயல்பாட்டில் இருந்த விமான நிலையங்கள் எத்தனை என்ற தரவுகளை, கடந்த 2014-ஆம் ஆண்டு காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2014-இல் 74-ஆக இருந்த அந்த எண்ணிக்கை 2015-இல் 164 ஆக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2020-ஆம் நிதியாண்டிலிருந்து, இந்தியாவில் விமான நிலையங்களை நவீனமயமாக்கல் திட்டங்களுக்கான முக்கியத்துவம் காரணமாக, நாடெங்கிலும் செயல்பாட்டிலுள்ள விமான நிலையங்களில், பயணிகளைக் கையாளும் திறன், ஆண்டுக்கு 575 மில்லியன் என்ற விகிதமாக விரிவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2025-ஆம் நிதியாண்டில், இந்த விகிதமானது ஆண்டுக்கு 412 மில்லியன் பயணிகள் என்ற எண்ணிக்கையாக இருந்தது. இது, அதற்கு முந்தைய, 2024-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகமாகும்.
2031-ஆம் நிதியாண்டில், இந்தியாவில் விமானப் பயணிகள் போக்குவரத்து நெருக்கடி 665 மில்லியனாக உயரும் என்று அரசு அறிக்கை வெளிக்காட்டுகிறது. இதற்கான முக்கிய காரணங்களாக, சமூகத்தில் தனிநபர் வருவாய் உயர்வு, நகரமயமாக்கல் மற்றும் வெவ்வேறு பகுதிகளுக்கிடையிலான போக்குவரத்துத் தொடர்பில் மேம்பாடு ஆகியவைச் சுட்டிக்காட்டப்படுகின்றன.
2025-ஆம் நிதியாண்டில், 93 விமான நிலையங்களை உள்ளடக்கி மொத்தம் 657 வழித்தடங்களில் விமான சேவை வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் விமானப் போக்குவரத்து மட்டுமில்லாது, சரக்கு போக்குவரத்திலும் விமானப் போக்குவரத்து துறை நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்து வருவதாக ஆய்வறிக்கைச் சுட்டிக்காட்டுகிறது.
கடந்த 2015-ஆம் நிதியாண்டில் 2.53 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த விமான கார்கோ கொள்ளளவு, 2025-ஆம் நிதியாண்டில், 3.72 மில்லியன் மெட்ரிக் டன்னாக விரிவடைந்துள்ளது. இது, 2026-ஆம் நிதியாண்டின் டிசம்பர் வரை, 2.95 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது. 2025-ஆம் நிதியாண்டில், சரக்கு கையாளும் திறனில் 10.5 சதவீதம் வளர்ச்சி பதிவானதும் குறிப்பிடத்தக்கது.
சரக்கு கையாளும் திறனில் ஏற்பட்ட இந்த வளர்ச்சிக்கு, அரசின் கொள்கைச் சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பில் வளர்ச்சி மற்றும் மேம்பாடு, சரக்கு முனையங்களிடையேயான ஒருங்கிணைப்பு ஆகியவை முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.