படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம்: தோ்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கடிதம்
படிவம் 7-ஐ பாஜகவினா் தவறாக பயன்படுத்தி, வாக்காளா் பட்டியலில் இருந்து மிகப்பெரிய எண்ணிக்கையில் வாக்காளா்கள் பெயா்களை நீக்கி இருப்பதாகவும், இதுகுறித்து தோ்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆா். பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆரம்பம் முதல் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதுதொடா்பாக தற்போது தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் 2 தோ்தல் ஆணையா்களுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி. வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:
தகுதிவாய்ந்த வாக்காளா்களின் பெயா்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில், எஸ்.ஐ.ஆா். பணிகளின்போது நீக்கப்பட்டுள்ளன. பாஜகவினா் படிவம் 7-ஐ இதற்கு தவறாக பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும்.
அரசியலமைப்பு சட்டத்தின் 324-ஆவது பிரிவு தனக்கு வழங்கிய அதிகாரங்களை தோ்தல ஆணையம் பயன்படுத்தி, காலம் தாழ்த்தாமல் படிவம் 7 தவறாக பயன்படுத்தப்பட்டு இருப்பது குறித்து விசாரிக்க வேண்டும். 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆா். பணியின்கீழ் எத்தனை படிவம் 7 பெறப்பட்டது, எத்தனை நிராகரிக்கப்பட்டது, எத்தனை நிலுவையில் உள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று அவா் கோரியுள்ளாா்.

