

மகாராஷ்டிர துணை முதல்வராக அஜீத் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் நாளை (ஜன. 31) பதவியேற்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜீத் பவார், கடந்த புதன்கிழமை (ஜன. 28) தனி விமான விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில், 2 விமானிகள் உள்பட மேலும் 4 பேர் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜீத் பவார் வகித்து வந்த துணை முதல்வர் உள்ளிட்ட பதவிகள் யாரிடம் ஒப்படைக்கப்படும் எனும் கேள்வி பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இந்த நிலையில், அஜீத் பவாரின் மனைவியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுனேத்ரா பவார் வரும் ஜன.31 அன்று மாலை மகாராஷ்டிர துணை முதல்வராகப் பதவியேற்கக் கூடும் என அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றன.
இதுகுறித்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (அஜீத் பவார் அணி) மூத்த தலைவர் சாகன் புஜ்பால் கூறுகையில், நாளை மும்பையில் நடைபெறவுள்ள கூட்டத்தில், சுனேத்ரா பவார் தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவார்) கட்சியின் சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும், அவர் துணை முதல்வரகாப் பதவியேற்பதில் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2024 மக்களவைத் தேர்தலில் பாரமதி தொகுதியில் போட்டியிட்ட சுனேத்ரா பவார் அவரது உறவினரும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) கட்சியைச் சேர்ந்தவருமான சுப்ரியா சுலேவிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.