

தேசியவாத காங்கிரஸின் இரு பிரிவுகளையும் இணைப்பது குறித்து பிப். 12 அன்று அறிவிக்க இருந்ததாக கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் புதன்கிழமை(ஜன. 28) விமான விபத்தில் சிக்கி பலியானார். அஜீத் பவாரின் மரணம் அவரது கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார், கடந்த 2023 ஜூலை மாதம், தேசியவாத காங்கிரஸ் தலைவரும் தனது சித்தப்பாவுமான சரத் பவாரிடம் இருந்து பிரிந்து தனி அரசியல் பயணத்தைத் தொடங்கினார். பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிர துணை முதல்வர் ஆனார்.
இந்நிலையில் மீண்டும் தேசியவாத காங்கிரஸை இணைக்க அஜீத் பவார் விருப்பம் தெரிவித்ததாகவும் அதுகுறித்து அவர் சரத் பவாரிடம் பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இருவரும் பேசிய ஒரு விடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சரத் பவார் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்,
"அஜீத் பவார், சஷிகாந்த் ஷிண்டே, ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரண்டு பிரிவுகளையும் இணைப்பது குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்கினர். இரு பிரிவுகளின் இணைப்புக்கான தேதியும் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 12 அன்று நாங்கள் அறிவிக்க இருந்தோம். துரதிர்ஷ்டவசமாக அதற்கு முன்பே அஜீத் பவார் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். இரு தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும்கூட" என்று கூறியுள்ளார்.
இதனிடையே அஜீத் பவாரின் மனைவி சுநேத்ரா பவார் இன்று மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
மறுபுறம், அஜித் பவாரின் மகன் பர்த் பவாரும் இன்று சரத் பவாரைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். சுமார் ஒன்றரை மணி நேரம் இருவரும் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஜீத் பவாரின் மரணம், தேசியவாத காங்கிரஸ் இணைப்பு பேச்சுவார்த்தை மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.