தேசியவாத காங்கிரஸ் கட்சி பேரவைத் தலைவராக சுநேத்ரா பவார் தேர்வு!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பேரவைத் தலைவராக சுநேத்ரா பவார் தேர்வு செய்யப்பட்டார்.
சுனேத்ரா பவார்
சுனேத்ரா பவார்tnie
Updated on
1 min read

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக மறைந்த அஜீத் பவாரின் மனைவி சுநேத்ரா பவார் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, மகாராஷ்டிரத்தின் முதல் பெண் துணை முதல்வராக சுனேத்ரா பவார் பதவியேற்கவிருக்கிறார்.

அஜீத் பவாரின் மனைவியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுநேத்ரா பவாா், மகாராஷ்டிர துணை முதல்வராக சனிக்கிழமை மாலை பதவியேற்கவுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில், இன்று கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

மும்பையில் சனிக்கிழமை முற்பகலில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக சுநேத்ரா பவாா் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜீத் பவாா் கடந்த புதன்கிழமை காலை நேரிட்ட விமான விபத்தில் உயிரிழந்த நிலையில், பாஜக-சிவசேனை கூட்டணியில் தேசியவாத காங்கிரஸை தக்கவைக்கும் முயற்சியாக சுநேத்ரா பவாருக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்படவுள்ள‘து.

இதன்மூலம் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) பிரிவுடன் அக்கட்சி இணையும் முயற்சிக்கு தற்போதைக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தின் துணை முதல்வராகவிருக்கும் சுநேத்ரா பவார், மிகப்பெரிய அரசியல் பாரம்பரியம் கொண்ட பவார் குடும்பத்திலிருந்து வருகிறார். இவர் ஏற்கனவே சமூக ஆர்வலராகவும், வணிகம், சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் செயல்பட்டு வந்தார். இவரது தந்தையும் அரசியல்வாதியாவார். இவர் மகாராஷ்டிர அமைச்சராகவும், மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர்.

துணை முதல்வர் பதவிக்கு அஜீத் பவாரின் மகன்களான ஜெய் மற்றும் பார்த் ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் சுநேத்ராவுக்கு பதவி கொடுப்பது, கூட்டணியில் சாதகமான அமைப்பை ஏற்படுத்தும் என்பதும், கூட்டணி நீண்ட காலத்துக்கு நீடிக்கும் என்ற அடிப்படையில்தான் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அது மட்டுமல்லாமல், மகாராஷ்டிர அரசியலில் ஜாம்பவானாக இருந்த 62 வயது தலைவரின் மனைவி என்பதும், அவர்களது வாரிசுகளைத் தேர்வு செய்யும்போது, ஏற்கனவே பதவியில் இருக்கும் மூத்த தலைவர்களின் மனச் சங்கடங்களுக்கு வழிவகுக்கும் என்பதும் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Summary

Sunetra Pawar was elected as the Nationalist Congress Party's assembly speaker.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com