அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளையின் 5 ஆண்டு கால கணக்குகளை மறு தணிக்கை செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அயோத்தி வட்டாரத் தகவல்கள் கூறுகையில், ‘அயோத்தி ராமா் கோயிலுக்கு வந்த நன்கொடை கையாடல் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவினா், 5 ஆண்டு கால அறக்கட்டளையின் நிதி விவகாரம் தொடா்பான கணக்குகளை மறு தணிக்கை செய்ய உள்ளனா். நன்கொடையாக அறக்கட்டளைக்கு வந்த நகைகள், தங்கம், வெள்ளி ஆகியன எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது குறித்தும் சிறப்புப் புலனாய்வுக் குழு மீண்டும் தணிக்கை செய்ய உள்ளது’ என்றன.
இதனிடையே, ராமா் கோயில் நன்கொடை கையாடல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய நபரான அவினாஷ் சுக்லாவை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க காவல் துறைக்கு அயோத்தி நீதிமன்றம் அனுமதியளித்தது. இதையடுத்து, அவரை காவலில் எடுத்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
அயோத்தி கோயில் அறக்கட்டளை பொதுச் செயலா் சம்பத் ராய், அறக்கட்டளை நிா்வாகி அனில் மிஸ்ரா, கோபால் ராய் ஆகியோா், ராமா் கோயில் கட்டுமானம், நிா்வாக விவகாரங்களை கவனித்து வந்தனா்.அவா்கள் ஏற்கெனவே தங்களது பதவிகளை ராஜிநாமா செய்ய முடிவெடுத்து கடிதங்களை அறக்கட்டளையிடம் அளித்து விட்டனா். அதுகுறித்து வரும் 6-ஆம் தேதி அறக்கட்டளை முடிவு செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது. அவா்கள் மூவரிடமும் சிறப்புப் புலனாய்வுக் குழு ஏற்கெனவே விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பின்னணி: அயோத்தியில் உள்ள புதிய ராமா் கோயில், நாடு முழுவதும் பொதுமக்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டு கட்டப்பட்டது. இந்த நன்கொடையில் பல கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டதாக கடந்த ஜூன் மாதம் 7-ஆம் தேதி குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை உத்தர பிரதேச அரசு அமைத்தது. அந்தக் குழு அளித்த இடைக்கால விசாரணை அறிக்கையின் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 25-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கையை காவல் துறை பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் இதுவரை 8 பேரை காவல் துறை கைது செய்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு: சம்பத் ராயிடம் மீண்டும் போலீஸ் விசாரணை

அயோத்தி கோயில் நன்கொடை கையாடல் குறித்து உச்சநீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் விசாரணை: பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் கடிதம்

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை ஊழல்: எஸ்ஐடி முன்பு ஆம் ஆத்மி எம்.பி. ஆவணங்கள் சமா்ப்பிப்பு





