தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

விபி-ஜி ராம் ஜி திட்டத்திற்காக மாநிலங்களுக்கு முதல் தவணையாக ரூ. 25,863 கோடி விடுவிப்பு

விபி-ஜி ராம்-ஜி திட்டத்திற்காக மாநிலங்களுக்கு முதல் தவணையாக ரூ. 25,863 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது தொடர்பாக...

News image

மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் - டிஎன்எஸ்

Updated On :6 ஜூலை 2026, 3:19 pm IST

புதுதில்லி: விபி-ஜி ராம்-ஜி திட்டத்திற்காக மாநிலங்களுக்கு முதல் தவணையாக ரூ. 25,863 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், இந்தியாவுக்கான ஊரக வேலை வாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் எனப்படும் விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் செயலாக்கத்தை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆய்வு செய்தார். அப்போது, இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான முதல் தவணையாக ரூ. 25,863 கோடியை விடுவித்தார்.

பின்னர் பேசிய சிவராஜ் சிங் சௌகான், 2026 ஜூலை 1 முதல் நாடு முழுவதும் விபி-ஜி ராம் ஜி திட்டத்தை எவ்வித இடையூறும் இன்றி செயல்படுத்த அரசு தீர்மானித்ததைச் சுட்டிக் காட்டினார். அதன்படி பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், விபி-ஜி ராம் ஜி திட்டம் நாடு முழுவதும் ஒரே நாளில் வெற்றிகரமாகவும் தடையின்றியும் செயல்படுத்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திலிருந்து விபி-ஜி ராம் ஜி திட்டத்திற்கு மாறும் செயல்முறை சுமுகமாகவும் தடையின்றியும் நடைபெற்றிருப்பதாகவும் அவர் கூறினார். இதில் இதுவரை, எந்தவொரு தொழில்நுட்ப அல்லது செயல்பாட்டுச் சிக்கல்களும் இல்லை. இந்த திட்டத்தில் முறைகேடுகள் அல்லது மோசடிகளுக்கு இடமில்லை என்று அவர் குறிப்பிட்டார்

ஏழைத் தொழிலாளர்களுக்குச் சேவை செய்வது கடவுளுக்குச் சேவை செய்வதைப் போன்றது. கிராமப்புறத் தொழிலாளர்களுக்குக் கண்ணியமான வேலைவாய்ப்பு, சரியான நேரத்தில் ஊதியம் வழங்குதல், நிலையான கிராமப்புறச் சொத்துக்களை உருவாக்குதல் ஆகியவற்றை உறுதி செய்வதே அரசின் நோக்கமாகும். நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்த கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், விபி-ஜி ராம் ஜி திட்டம் ஒரே நாளில் நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் தலைமைத்துவம், மாநிலங்களின் ஒத்துழைப்பு மற்றும் நாட்டின் நிர்வாகத் திறன் ஆகியவற்றால் சாத்தியமான ஒரு மாபெரும் சாதனை இது என்றார். பிரதமரின் அர்ப்பணிப்பு, நல்லாட்சி மற்றும் திறமையான ஒருங்கிணைப்பு ஆகியவற்றை பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.

முதற்கட்ட முன்னேற்றம் குறித்து பேசிய அமைச்சர், முதல் வாரத்திலேயே அதிக எண்ணிக்கையிலான கிராம ஊராட்சிகளில் பணிகள் தொடங்கப்பட்டு, லட்சக்கணக்கான கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

முதல் நாளிலேயே அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிய ஆந்திரம், கேரளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மீதமுள்ள ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்கள் கிராமப் பஞ்சாயத்துகளில் விரைவில் பணிகளைத் தொடங்குமாறு அவர் வலியுறுத்தினார்.

இந்த திட்டத்தின் கீழ் ஊதிய விகிதங்கள் சராசரியாக சுமார் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இனி நாட்டின் எந்த மாநிலத்திலும் நாள் ஊதிய விகிதம் ரூ.300-க்கு குறைவாக இருக்காது என்று அவர் தெரிவித்தார்.

15 நாள்களுக்குள் ஊதியம் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் மாநிலங்களில் போதுமான நிதி இருப்பதை உறுதி செய்வதற்காகவே முதல் தவணையாக ரூ.25,863 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படாதவாறு மத்தி அரசு தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ள நிலையில், அனைத்து மாநில அரசுகளும் தங்கள் பங்களிப்புத் தொகையை உரிய நேரத்தில் விடுவிக்க வேண்டும் என்று சிவராஜ் சிங் சௌகான் வலியுறுத்தினார்.

மாநிலங்களுக்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதற்காக, இணைச் செயலாளர் நிலையிலான அதிகாரிகள் தலைமையிலான 'பகுதி அதிகாரிகள்' குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மாநிலங்களுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, திட்டத்தை செயல்படுத்தல் தொடர்பான சிக்கல்களுக்கு உடனடி தீர்வை வழக்குவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஊதியத்தை உரிய நேரத்தில் வழங்குவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பு. திட்டத்தை திறம்படச் செயல்படுத்துவதற்கான எந்தவித நிதி பற்றாக்குறையும் இருக்காது என்பதை தெளிவுபடுத்திய சௌகான், மாநிலங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் முதல் தவணைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் மக்கள் பங்கேற்புடன் கூடிய கிராமப்புற வளர்ச்சியை உறுதிசெய்ய, உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப கிராம சபைகளும் கிராம ஊராட்சிகளும் வளர்ச்சிப் பணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

கடந்த 2000-இல் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமலாக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்துக்கு (100 நாள் திட்டம்) மாற்றாக கொண்டுவரப்பட்ட விபி-ஜி ராம் ஜி திட்ட மசோதா, எதிா்க்கட்சிகளின் எதிா்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்தாா்.

மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றி, 60 சதவீதம் மத்திய அரசின் பங்களிப்பும், 40 சதவீதம் மாநில அரசின் பங்களிப்பாகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, வேலை உறுதியளிப்பு நாள்கள் 100-இல் இருந்து 125-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 5,000 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். திட்டத்தின் அம்சங்கள், மக்களின் வேலைக்கான உரிமையைப் பறிப்பதாக குற்றஞ்சாட்டி, எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Releases First Installment of ₹25,863 Crore to States for VB-G-RAM-G

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.