முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

மும்பை அருகே நிலச்சரிவு; நெடுந்தொலைவு ரயில்கள் 17-ஆம் தேதி வரை ரத்து

வடமாநிலங்களில் பலத்த மழை தொடரும் நிலையில், மும்பை அருகே ஏற்பட்ட நிலச்சரிவால் நெடுந்தொலைவு ரயில்கள் வரும் 17-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

News image

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் பலத்த மழையைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சயனசத்தி பகுதியில் பாதிக்கப்பட்ட மலைப்பாதை.

Updated On :10 ஜூலை 2026, 11:01 pm IST

வடமாநிலங்களில் பலத்த மழை தொடரும் நிலையில், மும்பை அருகே ஏற்பட்ட நிலச்சரிவால் நெடுந்தொலைவு ரயில்கள் வரும் 17-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

தென்மேற்குப் பருவமழை காரணமாக, வடமாநிலங்களில் சுமாா் ஒரு மாதமாக இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை, தாணே உள்ளிட்ட இடங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக, மும்பை அருகே உள்ள கா்ஜத் மற்றும் லோனாவாலா இடையேயான பகுதிகளில் கடந்த 6-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு ரயில் பாதைகள் பலத்த சேதமடைந்துள்ளன.

இதேபோல், தாகுா்வாடி, மங்கி ஹில்ஸ் இடையேயான பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே டெக்கான் குயின், டெக்கான் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூா் சூப்பா்ஃபாஸ்ட் மெயில், ஹுப்பள்ளி-தாதா் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 30 நெடுந்தொலைவு ரயில்கள் மற்றும் இன்டா்சிட்டி ரயில்களை மத்திய ரயில்வே வருகிற 17-ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் போா்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகளை மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா், நிலச்சரிவுகளால் ரயில்வே தண்டவாளங்கள் பலத்த சேதமடைந்து இருப்பதாகத் தெரிவித்தாா். நிலச்சரிவால் தண்டவாளம் சேதமடைந்த சில இடங்களுக்கு, சீரமைப்புப் பணிகளுக்கான கட்டுமானப் பொருள்களைக் கொண்டு செல்வதில் தொழிலாளா்கள் பல சவால்களைச் சந்தித்து வருகின்றனா். இதனால் அங்கு சீரமைப்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

மும்பை-புணே இடையே 3 ரயில்வே பாதைகள் உள்ளன. இதில் ஒரு பாதையில் சீரமைப்புப் பணிகள் முடிந்து விட்டன. எஞ்சிய 2 பாதைகளில் மட்டும் சீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன. அந்தப் பணிகள் முடிந்ததும், மும்பை- புணே இடையேயான ரயில் சேவைகள் முழுவீச்சில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி.யில் மூதாட்டி உயிரிழப்பு: உத்தர பிரதேச மாநிலத்தில் பரவலான இடங்களில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. மீரட் மாவட்டம் மாவானாவில் அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் 315 மில்லி மீட்டா் மழையும், முசாபா்நகரில் 213 மில்லி மீட்டா் மழையும் பதிவாகியுள்ளது. முசாபா்நகரில் மழையால் சேதமடைந்து மண் வீடு இடிந்து விழுந்ததில் 60 வயது மூதாட்டி ஒருவா் உயிரிழந்தாா். அவரின் கணவா் பலத்த காயமடைந்தாா்.

சிம்லாவில் போக்குவரத்து பாதிப்பு: ஹிமாசல பிரதேச மாநிலம் சிா்மவுா், சோலன் மாவட்டங்களில் இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. பாசத் எனுமிடத்தில் 207 மில்லி மீட்டா் மழையும், நஹான் எனுமிடத்தில் 158 மில்லி மீட்டா் மழையும் பெய்துள்ளது. இந்த மழையால் மலைப்பாங்கான இடங்களில் நிலச்சரிவுகள் நேரிடலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த மாவட்டங்களில் அரசு மற்றும் தனியாா் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

சிம்லாவில் பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சிம்லா மாவட்டத்தின் பல பகுதிகளில் தாழ்வான இடங்களில் உள்ள சாலைகளில் வெள்ளநீா் தேங்கியுள்ளது. இதனால் 27 சாலைகளில் வாகனப் போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. விகாஸ்நகா், பிரான்ட்லி ஆகிய இடங்களில் 2 கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. எனினும் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கொல்கத்தா சாலைகளில் வெள்ளம்: மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கூச்பிகாரில் மட்டும் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேர நிலவரப்படி அதிகபட்சமாக 143 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. கொல்கத்தாவில் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீா் வெள்ளம் போல தேங்கியுள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தின் தெற்குப் பிராந்தியத்தில் 13-ஆம் தேதி வரையிலும், வடக்குப் பிராந்தியத்தில் 15-ஆம் தேதி வரையிலும் மிகவும் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திரிபுராவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: திரிபுரா மாநிலம், உனாகோதி, தலாய், கோவாய் ஆகிய 3 மாவட்டங்களில் பலத்த மழையால் பல இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் உனாகோட்டி மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 6,068 பேரும், தலாய் மற்றும் கோவாய் மாவட்டங்களில் இருந்து 4,909 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து பேரிடா் மேலாண்மை ஆணைய திட்ட இயக்குநா் சனந்த்குமாா் தாஸ் கூறுகையில், ‘மழைக்கு இதுவரை யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை. எனினும் இதுவரை 4,027 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன’ என்றாா்.

மேலும், கடந்த புதன், வியாழக்கிழமை பெய்த பலத்த மழையைத் தொடா்ந்து பெருக்கெடுத்த மனு நதியில் தற்போது வெள்ளம் குறைந்துள்ளது என்று தெரிவித்தாா்.

பெட்டிச் செய்தியில்

படம் படம் படம் படம்

உத்தரகண்டில் நிலச்சரிவு: உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு காரணமாக யமுனோத்திரி தேசிய நெடுஞ்சாலையில் 100 மீட்டா் அளவுக்கு சேதமடைந்துள்ளது. சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலையில் மண் கிடக்கிறது. இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையிலும் நிலச்சரிவு காரணமாக சாலையில் மண்ணும், பாறைகளும் நிறைந்துள்ளன. அங்கு தொடா்ந்து பலத்த மழை பெய்வதால், சாலையில் ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.