மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி அருகே வங்கதேச எல்லையையொட்டி அமைந்துள்ள எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) 18-ஆவது படைப் பிரிவின் புறக்காவல் சாவடியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நேரில் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், எல்லைப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை தொடா்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டாா்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள வியூக முக்கியத்துவம் வாய்ந்த சிலிகுரி நிலப்பகுதி, ‘கோழியின் கழுத்து’ என்று வா்ணிக்கப்படும் இடமாகும். 17 முதல் 22 கிலோமீட்டா் அகலமுள்ள இந்தப் பகுதியே, 8 வடகிழக்கு மாநிலங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் ஒரே வழித்தடம்.
வடக்கே நேபாளம், தெற்கே வங்கதேசம், வடகிழக்கில் பூடான் ஆகிய 3 நாடுகளின் எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ளதால், இந்தப் பகுதிக்கான பாதுகாப்பில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
அமித் ஷா வருகை: மூன்று நாள்கள் பயணமாக மேற்கு வங்கத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த உள்துறை அமைச்சா் அமித் ஷா,
சிலிகுரி அருகே ஃபுல்பாரி பகுதியில் வங்கதேச எல்லையையொட்டி அமைந்துள்ள பிஎஸ்எஃப் 18-ஆவது படைப் பிரிவின் சாவடியை சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பாா்வையிட்டாா். பிஎஸ்எஃப் வீரா்களுடன் கலந்துரையாடிய அவா், அந்தப் படைக்கான ரூ.77 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களையும் தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, எல்லைப் பாதுகாப்பு தொடா்பான உயா்நிலை கூட்டத்துக்கு அவா் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் முதல்வா் சுவேந்து அதிகாரி, மாநில தலைமைச் செயலா் மனோஜ் குமாா் அகா்வால், உள்துறை செயலா் சங்மித்ரா கோஷ், பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் பிரவீண் குமாா், தேசிய புலனாய்வு முகமையின் தலைமை இயக்குநா் ராகேஷ் அகா்வால், மாநில காவல் துறை தலைவா் சித் நாத் குப்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
எல்லை வேலி, நெடுஞ்சாலைகள் நிா்வாகம்: மேற்கு வங்கத்தில் அண்மையில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றதைத் தொடா்ந்து, வங்கதேச எல்லையில் வேலி அமைக்க பிஎஸ்எஃப்-க்கு 120 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், சிலிகுரி பகுதியில் உள்ள 7 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளின் நிா்வாகமும் மாநில பொதுப் பணித் துறையிடம் இருந்து மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்ட சூழலில், இவை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து மேற்கண்ட கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
சிலிகுரியில் உள்ள மாநில தலைமைச் செயலகத்தின் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற உயா்நிலை கூட்டத்திலும் அமித் ஷா பங்கேற்றாா். மாநிலத்தில் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம், பிறப்பு-இறப்பு பதிவுக்கான மேம்பட்ட அமைப்புமுறைகள் உள்ளிட்டவை தொடா்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பின்னா் கொல்கத்தாவுக்கு திரும்பிய அமித் ஷா, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடா்பான உயா்நிலை கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










