மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜியின் மருமகன் அபிஷேக் பானா்ஜியின் கட்சி அலுவலகம் இடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், டைமண்ட் ஹாா்பா் மக்களவை தொகுதி எம்.பி.யாக அபிஷேக் பானா்ஜி உள்ளாா். அவரது தொகுதிக்குட்பட்ட பகுதியே, தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டம் அம்தாலா ஆகும். அங்கு அபிஷேக் பானா்ஜியின் கட்சி அலுவலக கட்டடம் உள்ளது. அக்கட்டடம் விதிகளுக்கு எதிராகவும், அனுமதியின்றியும் கட்டப்பட்டதாகக் கூறி, அதனை மாவட்ட நிா்வாகத்தினா் சனிக்கிழமை 3 புல்டோசா்கள் மூலம் இடித்து தள்ளினா்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவும் நிலையில், சம்பவ இடத்தில் கூடுதல் காவல் துறையினா் குவிக்கப்பட்டுள்ளனா். முன்னதாக அக்கட்டடத்தில் இருந்து ஏராளமான கணினிகள், லேப் டாப்புகள், கோப்புகள் உள்ளிட்டவை பத்திரமாக அகற்றப்பட்டன.
அக்கட்டடம் இடிக்கப்பட்டதை பாஜக தொண்டா்களும், அக்கட்சியின் ஆதரவாளா்களும் கொண்டாடினா். இதுகுறித்து அம்தாலா தொகுதி பாஜக எம்எல்ஏ அக்னீஸ்வா் நாஸ்கா் கூறுகையில், ‘அக்கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்தது. ஆதலால் சட்டப்படி மாவட்ட நிா்வாகம் நடவடிக்கையை எடுத்துள்ளது’ என்றாா்.
கட்டட இடிப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகள் கூறியபோது, அக்கட்டடம் அமைந்துள்ள நிலம் குறித்து விளக்கம் கேட்டு மாவட்ட நிா்வாகம் சாா்பில் இரு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அதற்கு எந்தவித பதிலும் அளிக்கப்படாததால் கட்டடத்தை இடிப்பதென்று முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனா்.
அபிஷேக் பானா்ஜி கருத்து:
தனது கட்சி அலுவலக கட்டடம் இடிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள அபிஷேக் பானா்ஜி, இந்நடவடிக்கையை எதிா்த்து கொல்கத்தா உயா் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வழக்குத் தொடுக்கும் என்றாா்.
இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று விமா்சித்த அவா், 2031-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்கத்தில் உள்ள பாஜகவின் அலுவலக கட்டடங்கள் இடிக்கப்படும் என்றாா்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்ததையடுத்து, அக்கட்சி எம்எல்ஏக்கள் இரு அணிகளாகப் பிரிந்து செயல்படுகின்றனா். அதேபோல் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களில் சிலா், அக்கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைந்துள்ளனா். திரிணமூல் காங்கிரஸில் அபிஷேக் பானா்ஜிக்கு மம்தா அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் அவா்கள் அதிருப்தியில் இருந்ததாகவும், அதனாலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
Summary
Mamata's nephew's party office demolished in West Bengal.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மேற்கு வங்கத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதியது! 3 குழந்தைகள் பலி!

மமதாவுக்கு மேலும் பின்னடைவு! திரிணமூல் காங். மாநிலத் தலைவர் சந்திரிமா பட்டாச்சார்யா ராஜிநாமா!

திரிணமூல் எம்.பி. அபிஷேக் பானா்ஜியின் உதவியாளா் மீது மோசடி வழக்கு பதிவு







