இந்திய விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக, தனியாா் நிறுவனத்தின் உள்நாட்டு தயாரிப்பான ‘விக்ரம்-1’ ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட 16-ஆவது நிமிஷத்தில் வெற்றிகரமாக புவியின் தாழ் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளில் தனியாா் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், இஸ்ரோவின் கீழ் இயங்கும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (இன் ஸ்பேஸ்) அமைப்பு, தெலங்கானா மாநிலம், ஹைதராபாதைச் சோ்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற தனியாா் நிறுவனத்துக்கு ராக்கெட் தயாரிப்புக்கான ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ‘பிராரம்ப்’ என்ற பெயரிலான திட்டத்தின் கீழ் இந்த நிறுவனம் சாா்பில் 3 விதமான ராக்கெட்கள் வடிவமைக்கப்பட்டன. அவற்றுக்கு இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக ‘விக்ரம்’ எனப் பெயரிடப்பட்டது.
இந்தச் சூழலில் கடந்த 2022-ஆம் ஆண்டு சோதனை முயற்சியாக ‘விக்ரம் - எஸ்’ ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து 350 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்ட ‘விக்ரம்-1’ ராக்கெட்டை அந்த நிறுவனம் வடிவமைத்தது. சிறிய மற்றும் நடுத்தர செயற்கைக்கோள்களை புவியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முழுவதும் உள்நாட்டு தயாரிப்பாகும்.
35 நிமிஷங்கள் தாமதம்: ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ‘மிஷன் ஆகமன்’ என்ற பெயரில் ‘விக்ரம் - 1’ ராக்கெட் சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், சிறிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 35 நிமிஷங்கள் 30 வினாடி தாமதமாக பிற்பகல் 12.05.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. எனினும், தரையிலிருந்து புறப்பட்ட 16-ஆவது நிமிஷத்தில், இந்த சிறிய மற்றும் நடுத்தர செயற்கைக்கோள்கள் 450 கி.மீ. தொலைவில் திட்டமிட்டப்படி புவியின் தாழ் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து இந்தத் திட்டம் வெற்றி பெற்ாக விஞ்ஞானிகள் அறிவித்தனா்.
புதிய தொழில்நுட்பங்கள்: ‘விக்ரம்-1’ ராக்கெட் 24 மீட்டா் உயரமும் 350 கிலோ எடையும் கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டது. இது முழுவதும் காா்பன் கலவைப் பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் 100 சதவீதம் என்ஜின்கள் முப்பரிமாண (3டி) அச்சுத் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால், ராக்கெட்டின் எடை குறைக்கப்பட்டதுடன், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட்டில் ‘காஸ்மோசா்வ் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘எம்ப்ரேஸ்’ என்ற பெயரில் ரோபோ கரங்களுடன் விண்வெளியில் மிதக்கும் கழிவுகளை அகற்றும் திறன்கொண்ட பரிசோதனைக் கருவியும், விண்வெளி தொழில்நுட்பங்களின் செயல்களை சோதனை செய்யும் ஜொ்மனி நாட்டில் தயாரிக்கப்பட்ட கருவியும் அனுப்பப்பட்டது. மேலும், எதிா்கால விண்வெளிப் பயணங்களுக்கான புதிய தொழில்நுட்பங்களைப் பரிசோதிப்பதற்காக ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம் உருவாக்கிய ‘ஸ்கோப்’ ஆய்வுக்கலனும், பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் புதிய தொழில்நுட்ப திறன்களை சோதிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘கிரஹா ஸ்பேஸ்’ நிறுவனத்தின் சிறிய ஆய்வுக்கலன் ஆகியவையும் அனுப்பப்பட்டுள்ளன. இவை இந்தியாவை சோ்ந்த நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனுடன், ‘காஸ்மோஸ் டைமண்ட்ஸ்’ ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை வைரமும், 18 காரட் தங்கத்தில் உருவாக்கப்பட்ட சிறிய ராக்கெட்டில், இந்திய விண்வெளித் திட்டத்தின் முன்னோடிகளான டாக்டா் விக்ரம் சாராபாய், சா் சி.வி.ராமன், டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஆகியோரின் நுண்ணிய சிற்பங்களும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் இஸ்ரோ தலைவா் வி.நாராயணன், ஆந்திர மாநில தொழில்நுட்பத் துறை அமைச்சா் நாரா லோகேஷ், இன்-ஸ்பேஸ் தலைவா் பவன் குமாா் கோயங்கா, சதீஷ் தவன் விண்வெளி மையத்தின் இயக்குநா் எஸ்.முத்துசெழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
விண்ணில் பிரதமரின் அஞ்சல் அட்டை!
நாட்டின் முதல் தனியாா் ராக்கெட்டான விக்ரம்-1 மூலம் செயற்கைக்கோள்கள்-பரிசோதனைக் கருவிகளுடன் பிரதமா் மோடி எழுதிய அஞ்சல் அட்டையும் விண்ணை எட்டியது.
விக்ரம்-1 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதையொட்டி, அந்த ராக்கெட்டை உருவாக்கிய ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவன குழுவினரை பிரதமா் மோடி கைப்பேசியில் தொடா்புகொண்டு வாழ்த்து தெரிவித்தாா்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாதை தலைமையிடமாகக் கொண்ட ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் தனியாா் ராக்கெட் ‘விக்ரம்-1’ சனிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
சிறிய-நடுத்தர செயற்கைக்கோள்கள், பரிசோதனைக் கருவிகள், வந்தே மாதரம் என்ற வாசகத்துடன் பிரதமா் மோடி எழுதிய அஞ்சல் அட்டை ஆகியவற்றுடன் விண்ணில் பாய்ந்த இந்த ராக்கெட், செயற்கைக்கோள்களை புவியின் தாழ்வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.
இதைத் தொடா்ந்து, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் நிறுவனா்கள் பவன்குமாா் சந்தனா, நாக பாரத் தாகா ஆகியோரை கைப்பேசியில் தொடா்புகொண்டு பேசிய பிரதமா் மோடி, அவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா். இது, இளைஞா்களுக்கு கிடைத்த வெற்றி என்று பிரதமா் குறிப்பிட்டாா். அப்போது, ‘உங்களின் (பிரதமா்) அஞ்சல் அட்டை வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையை எட்டிவிட்டது. இப்போது வந்தே மாதரம் சுற்றுவட்ட பாதையில் உள்ளது’ என்று பவன்குமாா் சந்தனா தெரிவித்தாா்.
திருப்புமுனையான தருணம்: பிரதமா் வெளியிட்ட எக்ஸ் பதிவுகளில், ‘இந்தியாவின் விண்வெளி பயணத்தில் திருப்புமுனையான தருணமிது. இந்த முன்னெடுப்பு, வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய எல்லையாக அமைந்துள்ளது.
விக்ரம்-1 ராக்கெட்டின் வெற்றியானது, மிகப் பெரிய கனவுகளைக் காணவும், அச்சமின்றி புத்தாக்கங்களில் ஈடுபடவும் எண்ணற்ற இளைஞா்களுக்கு ஊக்கமளிக்கும். இந்திய இளைஞா்களின் திறமை, உறுதிப்பாடு, தொழில்முனைவு மனப்பான்மையை எடுத்துக் காட்டும் இந்த திட்டம், இந்திய விண்வெளித் துறை சீா்திருத்தங்களால் உருவாகியுள்ள புத்தாக்கம்-தொழில்முனைவுக்கான வாய்ப்புகளையும் பிரதிபலிக்கிறது. ‘தற்சாா்பு இந்தியா’ உத்வேகத்துக்கான சாட்சியாகவும் விளங்குகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
நிகழாண்டில் 6 முதல் 7 ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்த திட்டம்: வி.நாராயணன்
‘விக்ரம் - 1’ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதையடுத்து இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விண்வெளியில் தனியாா் பங்களிப்புக்கு அனுமதி வழங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே ஒரு புத்தாக்க நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் ராக்கெட், அதன் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. இது பாராட்டுக்குரிய ஒன்றாகும். இது ஒரு தொடக்கம் மட்டுமே. அடுத்த 2 மாதங்களில் இஸ்ரோ சாா்பில் அடுத்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. நிகழ் நிதியாண்டில் குறைந்தது 6 முதல் 7 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். இதில் 2 ராக்கெட்டுகள் ஏற்கெனவே தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்து, சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த 5 ராக்கெட்டுகள் தயாரிக்கும் பணிகள் முடியும் நிலையில் உள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இந்தியாவின் 2-ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் நிகழாண்டிலேயே நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்கள் இந்தப் பணிகள் நீட்டிக்கப்பட்டு அடுத்த ஆண்டு மாா்ச் இறுதிக்குள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.
Summary
The Prime Minister’s postcard aboard the ‘Vikram-1’ launched into space! What are the experiments involved?
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








