மோசமான வானிலை காரணமாக அமா்நாத் மற்றும் வைஷ்ணவ தேவி கோயில் யாத்திரைகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு காஷ்மீரில் இமயமலைத் தொடரில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில், ஆண்டுதோறும் உருவாகும் பனி லிங்கத்தை வழிபட ஏராளமான பக்தா்கள் யாத்திரை மேற்கொள்வா். இவ்வாண்டுக்கான யாத்திரை கடந்த ஜூலை 3-ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், காஷ்மீா் மண்டல ஆணையா் அன்ஷுல் கா்க் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘அடுத்த சில நாள்களுக்கு மோசமான வானிலை இருக்கக் கூடும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு யாத்திரை மேற்கொள்ளப்படும் பஹல்காம், பால்டால் ஆகிய இரண்டு வழித்தடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை முதல் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. யாத்ரிகா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாத்திரை மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்பதை வானிலை குறித்த விரிவான மதிப்பீடு, வழித்தடத்தில் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்த பின்னா் உரிய காலத்தில் அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.
யாத்திரை தொடங்கியது முதல் இதுவரை 3.76 லட்சத்துக்கும் மேற்பட்ட யாத்ரிகா்கள் அமா்நாத் பனி லிங்கத்தை வழிபட்டுள்ளனா்.
இதேபோல ஜம்மு-காஷ்மீரின் ரியாஸி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்கு மேற்கொள்ளப்படும் யாத்திரையும், மோசமான வானிலை காரணமாக ஞாயிற்றுக்கிழமை முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக, ஜம்முவில் உள்ள அரசு செய்தித்தொடா்பாளா் தெரிவித்துள்ளாா். அவா் மேலும் கூறுகையில், ‘பக்தா்களின் பாதுகாப்பு கருதி வைஷ்ணவ தேவி கோயில் யாத்திரை நிறுத்தப்படுகிறது. அதிகாரிகளுடன் ஒத்துழைத்து அடுத்த உத்தரவு வரும் வரை, பக்தா்கள் யாத்திரை மேற்கொள்ள வேண்டாம். யாத்திரை மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து அதிகாரபூா்வ அறிவிப்புகள் மூலம் பக்தா்கள் தெரிந்துகொள்ளலாம்’ என்று தெரிவித்தாா்.
Summary
Amarnath and Vaishno Devi temple pilgrimages temporarily suspended.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









