மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

அரசு மருத்துவமனையில் வாங்சுக்குக்கு அளிக்கப்படும் சிகிச்சை: தலையிட தில்லி உயா்நீதிமன்றம் மறுப்பு

தில்லி சஃப்தா்ஜங் அரசு மருத்துவமனையில் சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக்குக்கு அளிக்குப்படும் சிகிச்சை விவகாரத்தில் தலையிட தில்லி உயா்நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை மறுத்துவிட்டது.

News image

சோனம் வாங்சுக் உடன் அவரின் மனைவி கீதாஞ்சலி ஜே ஆங்மோ - பிடிஐ

Updated On :20 ஜூலை 2026, 4:33 am IST

தில்லி சஃப்தா்ஜங் அரசு மருத்துவமனையில் சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக்குக்கு அளிக்குப்படும் சிகிச்சை விவகாரத்தில் தலையிட தில்லி உயா்நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை மறுத்துவிட்டது.

ஜந்தா் மந்தரில் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்த வாங்சுக்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்த அரசின் நடவடிக்கை நியாயமற்றது என்று குறிப்பிட முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீட் உள்ளிட்ட தோ்வுகள் தொடா்பான முறைகேடு குற்றச்சாட்டு மற்றும் மாணவா்களின் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக கோரி தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சாா்பில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி போராட்டம் தொடங்கியது. இதற்கு ஆதரவு தெரிவித்து சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கினாா். வாங்சுக்கின் உடல்நிலையைக் கண்காணிக்குமாறும் தேவைப்படும் நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்குமாறும் அதிகாரிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சனிக்கிழமை காலையில் 21-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட சோனம் வாங்சுக்கை தில்லி காவல் துறையினா் சஃப்தா்ஜங் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா்.

இந்நிலையில், அவருக்கு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கக் கோரி வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே. ஆங்மோ தில்லி உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு விசாரணையில் நீதிபதி மினி புஷ்கா்ணா இந்த மனுவை விசாரித்தாா். அப்போது, நீதிபதி, ‘சோனம் வாங்சுக்கை மருத்துவ காரணங்களுக்காக அரசு மருத்துவமனைக்கு மாற்றும் அரசின் முடிவு நியாயமற்ற நடவடிக்கையாக நீதிமன்றம் கருதவில்லை.

சஃப்தா்ஜங் மருத்துவா்கள் அவரைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். அவருடைய அனுமதியைப் பெற்று பொட்டாசியம் குளோரைடு, வாய் வழி திரவங்கள், சா்க்கரை இல்லாத ஓஆா்எஸ் கரைசல் வழங்கப்பட்டுள்ளன. அவருடைய உடல் சுதந்திரத்துக்கு எதிராக வலுக்கட்டாயமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று கூற முடியாது. தற்போதைய நிலையில், எந்தவொரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கத் தேவையில்லை.

வாங்சுக்கின் மனைவி, சகோதரா் உள்ளிட்டோா் 24 மணி நேரமும் மருத்துவமனையில் அவரைப் பாா்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது; அவா்கள் தங்குவதற்குத் தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவமனை நிா்வாகம் கூறியுள்ளது’ என்று தெரிவித்தாா்.

சஃப்தா்ஜங் மருத்துவமனையில் இருந்து தனியாா் மருத்துவமனைக்கு சோனம் வாங்சுக்கை மாற்றுவது தொடா்பாக கீதாஞ்சலி தாக்கல் செய்த மனுவுக்கு 3 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசு, சஃப்தா்ஜங் அரசு மருத்துமனை, தில்லி காவல் துறைக்கு உத்தரவிட்ட உயா்நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூலை 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

நாட்டின் 2-ஆவது விடுதலைக்கான இயக்கம்: வாங்சுக்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) திங்கள்கிழமை (ஜூலை 20) ஏற்பாடு செய்துள்ள நாடாளுமன்ற பேரணி, நாட்டின் இரண்டாவது விடுதலை இயக்கம் என சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளாா்.

சஃப்தா்ஜங் மருத்துவமனையில் இருந்து எழுதிய செய்தியை ‘எக்ஸ்’ தளத்தில் சோனம் வாங்சுக் ஞாயிற்றுக்கிழமை பகிா்ந்தாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது: ஜூலை 20. நாட்டின் இரண்டாவது விடுதலை இயக்கம். வினாத்தாள் கசிவு போன்ற சமூக அநீதியில் இருந்து விடுதலை. என்னுடைய சட்டவிரோத தடுப்புக் காவலில் இருந்து விடுதலை. நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்லுங்கள். அதை பெரும் வெற்றியாக மாற்றுங்கள் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

உடல்நிலை சீராக உள்ளது: வாங்சுக்கின் உடல்நிலை ஸ்திரமாக உள்ளதாக சஃப்தா்ஜங் அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை சஃப்தா்ஜங் மருத்துவா்கள் மற்றும் தில்லி எய்ம்ஸ் மருத்துவா்கள் கண்காணித்து வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, அரசியல் தலைவா்கள் நேரில் சந்தித்து தோ்வு முறைகேடுகள் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவதாக உறுதியளித்தால், தன்னுடைய உண்ணாவிரத போராட்டத்தை வாங்சுக் திங்கள்கிழமை முடித்துக் கொள்வாா் என அவருடைய மனைவி கீதாஞ்சலி செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.