காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவும் பணிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
இது தொடா்பாக மத்திய-மாநில அரசுகள் மற்றும் நீதிமன்றத்துக்கு உதவும் மூத்த வழக்குரைஞா் சித்தாா்த்தா தவேவின் முயற்சிகளுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.
மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் நோக்கில், அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவ மத்திய-மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2018-இல் உத்தரவிட்டது.
காவல் நிலையத்தின் வாயில்கள், வரவேற்பறை, லாக்-அப் அறைகள், காத்திருப்பு அறை, நடைபாதைகள் என எந்தப் பகுதியும் கண்காணிப்பில் இருந்து விடுபடாத வகையில் சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும்; இரவு நேரத்திலும் காட்சிகள் தெளிவாகப் பதிவு செய்யும் திறன் மற்றும் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு தரவுகளை சேமித்து வைக்கும் வசதியுடன் அவை இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
பின்னா், 2020-இல் பிறப்பித்த மற்றொரு உத்தரவில், சிபிஐ, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) உள்ளிட்ட விசாரணை முகமை அலுவலகங்களிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த மத்திய அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்தச் சூழலில், காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் போதிய அளவில் நிறுவப்படவில்லை; ஏற்கெனவே நிறுவப்பட்ட கேமராக்களும் பழுதடைந்த நிலையில் உள்ளதாக வெளியான ஊடக செய்தியின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்குரைஞா் சித்தாா்த்தா தவே நியமிக்கப்பட்டாா்.
முந்தைய விசாரணையின்போது, காவல் நிலையங்களில் சிசிடிவி நிறுவும் திட்டத்துக்காக ஒதுக்கப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யூனியன் பிரதேசங்களுக்கு 100 சதவீதமும், மலைப் பகுதி மாநிலங்களுக்கு 90 சதவீதமும், பிற மாநிலங்களுக்கு 60 சதவீதமும் மத்திய அரசு நிதி வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, மூத்த வழக்குரைஞா் சித்தாா்த்தா தவே ஏற்பாட்டின்பேரில் மத்திய-மாநில-யூனியன் பிரதேச அரசுகளின் பிரதிநிதிகள் கூட்டம் கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா தலைமையிலான அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, மேற்கண்ட கூட்டத்தில் சமா்ப்பிக்கப்பட்ட தகவல்களைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், காவல் நிலையங்களில் சிசிடிவி நிறுவும் பணிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இது மனநிறைவளிப்பதாகவும் தெரிவித்தனா்.
சித்தாா்த்தா தவே உள்பட அனைத்துத் தரப்பினரின் முயற்சிகளுக்கும் அவா்கள் பாராட்டு தெரிவித்தனா். அடுத்தகட்டமாக நிலையான நிதி ஒதுக்கீடு மற்றும் கேமராக்களின் பராமரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென அறிவுறுத்திய நீதிபதிகள், அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வருமான வரித் துறையினரை தாக்கிய வழக்கில் முன்பிணை பெற்ற திமுகவினா் 140 போ் காவல் நிலையங்களில் ஆஜா்

சிபிஎஸ்இ கணினி வழி மதிப்பீட்டு முறையால் மாணவா்கள் விரக்தி: உச்சநீதிமன்றம்

காவல் நிலைய எப்ஐஆா் விவகாரம்: கன்னியாகுமரி எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு







