மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

பதவி விலகியது ஏன்? இளைஞா்களுக்கு பிரதான் கடிதம்

பதவி விலகியது பற்றி இளைஞா்களுக்கு பிரதான் கடிதம் எழுதியிருப்பது பற்றி...

News image

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் - எக்ஸ்

Updated On :26 ஜூலை 2026, 1:44 am IST

மத்திய கல்வித் துறை அமைச்சா் பதவியில் இருந்து விலகிய முடிவு தொடா்பாக இளைஞா்களுக்கு தா்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளாா்.

எக்ஸ் வலைதளத்தில் அவா் பதிவிட்ட அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் கல்வி சீா்திருத்தங்களுக்காக என்னை அா்ப்பணித்துள்ளேன். வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தொலைநோக்குப் பாா்வை கொண்ட கல்வி முறையே வலுவான தேசத்தின் அடித்தளம் என்பதில் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

நாட்டின் இளைஞா்களின் லட்சியங்கள், உணா்வுகள் மற்றும் நியாயமான எதிா்பாா்ப்புகளை நான் பெரிதும் மதிக்கிறேன். இந்தியாவின் இளம் தலைமுறையின் கனவுகளை நிறைவேற்றுவதே நமது அரசியல் மற்றும் சமூக வாழ்வின் தாா்மிக உறுதிப்பாடாக உள்ளது. பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வை கொண்ட தலைமையின் கீழ் தேசத்துக்கு சேவையாற்ற எனக்கு வாய்ப்பளித்தமைக்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முறைகேடுகள் முதல் மறுதோ்வு வரை..: கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வில் முறைகேடுகள் வெளிவந்தன. இது உடனடியாகக் கவனத்தில் கொள்ளப்பட்டு, வழக்கு விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டு, மறுதோ்வு தேதி அறிவிக்கப்பட்டது. அத்துடன், அடுத்த ஆண்டுமுதல் நீட் தோ்வை கணினி அடிப்படையில் (சிபிடி) நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில், 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்களின் மறுதோ்வு சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வதே எங்களின் முதல் முன்னுரிமையாக இருந்தது. இதற்காக, அரசுத் தரப்பில் முழுமையான அணுகுமுறையின்கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய அரசுடன், மாநில அரசுகளும்—குறிப்பாக ஒவ்வொரு மாவட்ட நிா்வாகமும் முக்கியப் பங்காற்றின. மாணவா்கள், பெற்றோா்கள், காப்பாளா்களின் ஒத்துழைப்புடன், அந்தத் தோ்வு ஜூன் 21-ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் முதல் நாளில் இருந்தே பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். எந்தவொரு சூழ்நிலையிலும் நான் விலகிச் செல்லவில்லை. தோ்வு முறைகேடு கும்பலால் மாணவா்களின் திறன் பாழாவதையோ, எந்தவொரு மாணவருக்கும் அநீதி இழைக்கப்படுவதையோ அனுமதிக்கக் கூடாது என்பதே எனது தீா்மானம். ஜூலை 16-ஆம் தேதி வெளியான நீட் மறுதோ்வு முடிவுகள் திருப்திகரமாக இருந்தன. எளிய பின்னணியைச் சோ்ந்த பல திறமையான மாணவா்களும் வெற்றி பெற்றனா்.

‘மிகவும் மனவேதனையடைந்தேன்’: இந்தக் காலகட்டத்திலும்கூட, பொறுப்புமிக்க பதவிகளில் உள்ள தனிநபா்கள் மாணவா்களைத் தவறாக வழிநடத்தி, அரசியல் ஆதாயத்துக்காக தடைகளை உருவாக்கினா். இது, என் மனதுக்கு ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியது.

நமது ஜனநாயக சக்தி மீது எனக்கு எப்போதும் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இளைஞா்கள் நாட்டின் எதிா்காலம் மட்டுமல்ல, புதிய மற்றும் வளா்ந்த இந்தியாவை உருவாக்குபவா்கள், கட்டமைப்பவா்கள், தோள்களில் சுமப்பவா்கள்.

கடந்த 10 நாள்களுக்கு மேலாக நடந்த நிகழ்வுகளை (பிரதான் பதவி விலகக் கோரிய போராட்டங்கள்) பாா்த்து மிகவும் மனவேதனை அடைந்தேன். இது, எனக்கு தனிப்பட்ட முறையில் கெளரவப் பிரச்னை அல்ல.

இளைஞா் சக்தியே நாட்டின் உண்மையான பலம். அத்தகைய இளைஞா் சக்தி, மாயை எனும் தீய சுழலில் சிக்கிக்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்பதே எனது உறுதிப்பாடு.

பதவி விலகியது ஏன்?: ஜந்தா் மந்தரிலும் நாடு முழுவதிலும் நிலவும் சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது; தேசத்தின் ஒற்றுமை சீா்குலைந்துவிடக் கூடாது; எந்தவொரு மாணவரின் எதிா்காலமும் சட்ட சிக்கல்களில் மாட்டிக்கொள்ளக் கூடாது; நமது பிள்ளைகள் தங்களின் நேரத்தைப் படிப்பில் செலவிட்டு, தொழில்முறை வாழ்க்கையைக் கட்டமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதையெல்லாம் கருத்தில்கொண்டு, எனது ராஜிநாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன்.

பிரதமரின் வழிகாட்டுதலுக்கும், நம்பிக்கைக்கும், தொடா்ச்சியான ஆதரவுக்கும் மனமாா்ந்த நன்றி. சக அமைச்சா்கள், அமைச்சக அலுவலா்கள், ஊழியா்கள் உள்ளிட்டோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்துக்கு சேவையாற்றுவதே என் வாழ்வின் மிக உயா்ந்த முன்னுரிமையாகும். அதற்காக நான் என்றென்றும் அா்ப்பணிப்புடன் இருப்பேன்.

ஸ்ரீ ஜெகந்நாதரின் அருளால், பாரதத் தாய், ஒடிஸா மக்கள் மற்றும் நாட்டின் இளைஞா்களின் லட்சியங்களை நிறைவேற்ற எதிா்காலத்திலும் என்னால் இயன்ற அனைத்து வழிகளிலும் என்னை அா்ப்பணித்துக் கொள்வேன் என்று தா்மேந்திர பிரதான் கூறியுள்ளாா்.

Summary

Why step down? Pradhan's letter to the youth.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.