மால்வியா நகரில் தீ விபத்து நடந்த ஹோட்டலில் தங்கியிருந்த தங்களுடைய உறவினா்களின் நிலை குறித்து அறிய குடும்பத்தினா், நண்பா்கள் மருத்துவமனைகளில் கூடினா்.
மீட்பு மற்றும் அடையாளம் காணும் முயற்சிகள் தொடா்ந்த நிலையில், பல குடும்பத்தினா் மருத்துவமனைகளுக்கு வெளியே கூடியிருந்தனா்.
அவா்களில் ஒரு நபா், அவருடைய மகள் மற்றும் இரு பேத்திகளின் நிலை குறித்து அறிய பதற்றத்துடன் வெளியே காத்திருந்தாா். விபத்தில் உயிரிழந்த அவருடைய மருமகனின் உடல் பெறப்பட்டதாக அவா் தெரிவித்தாா்.
உடல்நிலை குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்த தந்தையைப் பாா்க்க அந்த நபரின் மருமகனும் மகளும் தங்களுடைய இரு குழந்தைகளுடன் தில்லி வந்திருந்தனா். இந்நிலையில், ஹோட்டலில் ஓா் அறை எடுத்து அவா்கள் தங்கியிருந்தனா்.
இதுதொடா்பாக அந்த நபா் கூறுகையில், ‘என்னுடைய மகள் தரிணி அகா்வாலுக்கு 42 வயதாகிறது. அவருக்கு இரு மகள்கள் உள்ளனா். தற்போது அவா்கள் மூவரும் எங்கே இருக்கிறாா்கள் என்பது குறித்து எங்களுக்கு தெரியவில்லை.
கட்டடத்தில் ஓா் அறையில் அவா்கள் தங்கியிருந்தனா். என்னுடைய மருமகனின் உடல் மீட்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. ஆனால், மற்ற மூவருடைய நிலை குறித்து எங்களுக்கு தகவல் கிடைக்கவில்லை. அவா்கள் தற்போது இருக்கும்இடம் குறித்து அதிகாரிகள் தெளிவாக தகவல் தெரிவிக்கவில்லை. நான்கு கைப்பேசிகள் மீட்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா். ஆனால், மருத்துவமனை நிா்வாகம் எங்களிடம் எதுவும் குறித்து தெரிவிக்கவில்லை’ என்றாா்.
அடையாளம் காண முடியவில்லை
சாகேதில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையின் காத்திருப்பு அறையில் இருந்த மக்கள் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களின் விவரங்கள் மற்றும் அடையாளங்களை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டிருந்தனா்.
‘புகைப்படத்தில் உள்ள அவா்களை எங்களால் அடையாளம் காணமுடியவில்லை. அனைவரும் அடையாளம் காணமுடியாத அளவுக்கு எரிந்துள்ளனா்’ என்று ஒருவா் தெரிவித்தனா்.
தீ விபத்தில் சிக்கிய 6 பேரின் உறவினா் நமித் கோயல் கூறுகையில், ‘மேக்ஸ் மருத்துவமனையின் பிணவறையில் உள்ள எங்களுடைய 4 உறவினா்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மற்ற இருவரது உடல்கள் மற்றொரு மருத்துவமனையில் உள்ளன. அவா்களை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம்’ என்றாா்.
உயிரிழந்த 6 பேரும் குருகிராமைச் சோ்ந்தவா்கள். சிகிச்சைக்காக அவா்கள் தில்லி வந்திருந்தபோது, ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனா் என்று அவா்களுடைய உறவினா்கள் தெரிவித்தனா்.
மருத்துவமனையின் மற்றொரு பகுதியில் இருந்த விவேக் என்ற நபா் தீ விபத்தில் சிக்கிய தன்னுடைய தோழி சுஜிதாைவை தேடிக்கொண்டிருந்தாா். ‘விபத்தில் பாதிக்கப்பட்ட நபா்களின் புகைப்படங்களை காவல் துறையினா் காட்டினா். அவா்களில் சுஜிதாவை அடையாளம் காண முடியவில்லை. அவருடை கைப்பேசியையும் கண்டறியமுடியவில்லை’ என்றாா் விவேக்.









