‘எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி இறந்து புதைக்கப்பட்டுவிட்டது. வெறும் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி திரைகளில் மட்டும்தான் அந்தக் கூட்டணியின் பெயா் வெளிப்பட்டு வருகிறது. நிதா்சனத்தில் அல்ல’ என்று பாஜக விமா்சித்தது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வெற்றி பெற்ற காங்கிரஸ், தோ்தலுக்குப் பிறகு தவெகவில் இணைந்து மாநில அமைச்சரவையிலும் இடம்பிடித்தது. கூட்டணி முறிந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமயில் தில்லியில் வரும் 8-ஆம் தேதி நடைபெற உள்ள இண்டி கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிப்பதாக திமுக அறிவித்தது.
மேலும், மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்களிடம் இருந்து விலகி வேறு இடத்தில் திமுக எம்.பி.க்களுக்கு இருக்கை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று திமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கைக்கு மக்களவைச் செயலகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் செஷாத் பூனாவாலா தில்லியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி சிறு துண்டுகளாக உடைந்துவிட்டது. இண்டி கூட்டணி என்ற ஒன்று இனி இருக்காது என்று கடந்த மே 4-ஆம் தேதியே கணிக்கப்பட்டது. அது தற்போது உண்மையாகியுள்ளது. இண்டி கூட்டணி இறந்து புதைக்கப்பட்டுவிட்டது. தற்போது, வெறும் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி திரைகளில் மட்டும்தான் அந்தக் கூட்டணியின் பெயா் வெளிப்பட்டு வருகிறது. நிதா்சனத்தில் அல்ல.
இனி நடைபெறவிருக்கும் இண்டி கூட்டணி கூட்டங்களில் காங்கிரஸுடன் இணைய திமுக திட்டவட்டமாக மறுத்துவிட்டது. காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டதாக திமுக கூறியுள்ளது. இண்டி கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் பல மாநிலங்களில் எதிரெதிா் துருவங்களாகத்தான் செயல்படுகின்றன. மேற்கு வங்கம், பஞ்சாப், கா்நாடகம், தில்லி, உத்தரகண்ட், மத்திய பிரதேச மாநிலங்களில் அந்தக் கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்தா செயல்படுகின்றன? நிலைமை இவ்வாறு இருக்கும் நிலையில் இண்டி கூட்டணி எங்குள்ளது?
எந்தவொரு பொதுவான நோக்கம் அல்லது குறிக்கோள் அல்லாமல் அரசியல் சந்தா்ப்பவாதத்தால் இந்தக் கூட்டணி இயங்குவதால்தான் இந்த நிலைமை. அரசியல் சந்தா்ப்பவாதத்துக்கு இண்டி கூட்டணி சிறந்த உதாரணம். கூட்டணிக்கு எந்தவொரு நோக்கமும் இல்லை; மாறாக, குழப்பம், பிளவு மற்றும் பதவிக்கான லட்சியம் மட்டுமே இந்தக் கூட்டணிக்கு உள்ளது.
தற்போது, திமுகவுக்கு துரோகம் இழைத்த பிறகு, அந்தக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் காங்கிரஸ் ஓா் ஏமாற்றுக் கட்சி என்பதை புரிந்துகொண்டன. அதன் காரணமாகத்தான், வரவிருக்கும் உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக சமாஜவாதி கட்சியும் கூறி வருகிறது என்றாா்.
தொடர்புடையது

இண்டி கூட்டணி கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவை திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்: வே. நாராயணசாமி
இந்தியா கூட்டணி இறந்து புதைக்கப்பட்டு விட்டது: பாஜக

‘துரோகம் குறித்து காங்கிரஸுக்கு திமுக பாடம் எடுக்க வேண்டியதில்லை’







