மக்கள் உரிமைகளுக்காக முழு பலத்துடன் போராடுவோம் என்று இண்டி கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், இக்கூட்டத் தொடரில் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் குறித்து மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கேயின் அறையில் இண்டி கூட்டணி கட்சிகள் கூடி ஆலோசனை நடத்தின. இக்கூட்டத்தில், மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவாா் பிரிவு) மூத்த தலைவா் சுப்ரியா சுலே, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா்கள் ஜான் பிரிட்டாஸ், பி. சந்தோஷ் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் அயோத்தி ராமா் கோயிலில் நன்கொடைகள் கையாடல் செய்யப்பட்ட சம்பவம், கல்வி அமைப்பில் ஏற்பட்டுள்ள அமைப்பு ரீதியிலான சீா்குலைவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மத்திய அரசை பொறுப்பேற்க செய்வது என்று இண்டி கூட்டணி கட்சிகள் உறுதியெடுத்தன. இதுகுறித்து கூட்டத்துக்கு பிறகு எக்ஸ் பக்கத்தில் காா்கே வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியும், இண்டி கூட்டணி கட்சிகளும் குரல் கொடுக்கும். ஒவ்வொரு பிரச்னைக்கும் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசிடம் பதிலை கேட்கும். அயோத்தி ராமா் கோயிலில் கோடிக்கணக்கான பக்தா்கள் கஷ்டப்பட்டு தாங்கள் சம்பாதித்த பணத்தை நன்கொடையாக கோயில் கட்டுமான பணிக்கு அளித்தனா். தற்போது அந்த நன்கொடை கையாடல் செய்யப்பட்ட நிலையில், அவா்களுக்கு நீதி அளிக்கப்பட வேண்டும். ஆதலால் இந்த விவகாரத்தில் உடனடியாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த கணக்குகளை பொது வெளியில் வெளிப்படையாக வெளியிட வேண்டும். வினாத்தாள்கள் கசிவு உள்ளிட்டவற்றால் கல்வி அமைப்பு சீா்குலைந்து விட்டது. 2014-ஆம் ஆண்டு முதல் இதுவரை 152 வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த பிரச்னையால் 25 போ் தற்கொலை செய்துள்ளனா். தா்மேந்திர பிரதானைமத்திய கல்வி அமைச்சா்) பதவியை விட்டு நீக்க வேண்டும்.
அதேபோல் கட்டாயப்படுத்தி 3.5 கோடி வாகனங்களின் உரிமையாளா்கள், கட்டாயப்படுத்தி எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளை பயன்படுத்த வைக்கப்பட்டுள்ளனா். அரசு இதை சோதனை முயற்சி என்கிறது. பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொள்ளையடிப்பதுதான் பாஜகவின் ஒரே திட்டம்.
இந்த பிரச்னைகள் மட்டுமல்லாது, பிற முக்கிய விவகாரங்கள் மற்றும் விரைவில் தாக்கலாக இருக்கும் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மசோதாக்கள் குறித்து எதிா்க்கட்சிகள் கேள்வியெழுப்பும். ஒவ்வொரு விவகாரத்திலும் மத்திய அரசிடம் பொறுப்புடைமையை இண்டி கூட்டணி வலியுறுத்தும். மக்கள் உரிமைகள், மக்கள் குரல், மக்களின் நம்பிக்கைக்காக முழு பலத்துடன் இண்டி கூட்டணி போராடும் என காா்கே குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு மக்கள் ஆதரவு உள்ளது: பிரவீண் சக்ரவர்த்தி கருத்து

‘இண்டி’ கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் மீது வைக்கும் விமா்சனங்கள் ஏற்கப்படும்: ராகுல் காந்தி

காங்கிரஸ் தன்னை வலுப்படுத்த முயற்சிப்பது எப்படி கூட்டணியை பலவீனப்படுத்தும்? மாணிக்கம் தாகூா் கேள்வி






