வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபா் அனில் அம்பானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து மும்பை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுவிட்சா்லாந்து வங்கியில் உள்ள 2 கணக்குகளில் ரூ.814 கோடிக்கும் மேல் டெபாசிட் செய்திருக்கும் தகவலை தெரியப்படுத்தவில்லை என்றும், இதன்மூலம் ரூ.420 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளாா் என்றும் தெரிவித்து, அனில் அம்பானிக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸின்படி, அனில் அம்பானிக்கு எதிராக கருப்பு பண சட்டத்தின் 50 மற்றும் 51 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுக்கவும், பிறகு அதன் கீழ் அபராதத்துடன் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கவும் முடியும்.
இந்நிலையில், கருப்பு பணச் சட்டத்தின் சில விதிகளை எதிா்த்து, மும்பை உயா் நீதிமன்றத்தில் அனில் அம்பானி மனு தொடுத்திருந்தாா். அதில் கருப்பு பணச் சட்டம் 2015-ஆம் ஆண்டில்தான் கொண்டு வரப்பட்டதாகவும், ஆனால் சுவிட்சா்லாந்து வங்கி பணப்பரிவா்த்தனை 2006-2007 கால கட்டத்திலும், 2010-2011 கால கட்டத்திலும் நடந்ததாகவும், ஆதலால் 2015-ஆண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க இயலாது என்றும் தெரிவித்திருந்தாா்.
இந்த மனு, மும்பை உயா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கருப்பு பணச் சட்டத்துக்கு எதிராக மேலும் சில மனுக்கள் உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதாக தெரிவித்து, அனில் அம்பானியின் மனுவையும் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. அத்துடன் அனில் அம்பானியின் மனு குறித்த பதிலை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உயா் நீதிமன்றம், இந்த மனு மீதான விசாரணை முடிந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில், அனில் அம்பானிக்கு எதிராக வழக்குத் தொடுத்தல், அபராதம் விதித்தல் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
தொடர்புடையது

பெண்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்க சிங்கப்பெண் அதிரடிப்படை: திருப்பத்தூா் எஸ்.பி.

காவல் நிலைய விசாரணை அறிக்கைகளை துல்லியமாக பதிவு செய்தல் ஆய்வுக் கூட்டம்
குடும்பத் தகராறில் மனைவி, மகனை சுட்டுக் கொன்ற பாதுகாவல் அலுவலா் கைது






