மத்தியப் பிரதேசத்தில் இருந்து பாஜகவின் 3 வேட்பாளர்களும் மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தேர்தலில், பாஜக சார்பில் தருண் சுக், ரஜ்னீஷ் அகர்வால் மற்றும் மகேஷ் கேவட் ஆகியோர் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பாஜகவின் வேட்பாளர்கள் தருண் சுக், ரஜ்னீஷ் அகர்வால் மற்றும் மகேஷ் கேவட் ஆகியோர் போட்டியின்றி மாநிலங்களவைக்குத் தேர்வானதாக, தேர்தல் அலுவலர் அரவிந்த் சர்மா இன்று (ஜூன் 11) அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட பாஜக வேட்பாளர்கள் 3 பேரும் மத்தியப் பிரதேச பாஜக தலைவர் ஹேமந்த் கண்டேல்வாலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் காலியாக இருந்த 3 மாநிலங்களவை இடங்களில் ஆளுங்கட்சியான பாஜக 2 இடங்களிலும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் 1 இடத்திலும் வென்றிருக்க முடியும்.
ஆனால், காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் மீனாட்சி நடராஜன் தனது வேட்புமனுவில் அவர் மீது நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டதைக் குறிப்பிடவில்லை என்று பாஜக வேட்பாளர் மகேஷ் கேவட் தேர்தல் ஆனையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனால், மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி அரவிந்த் சர்மா நிராகரித்தார். இதனால், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது. இதனை எதிர்த்து மீனாட்சி நடராஜன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
In Madhya Pradesh, all 3 BJP candidates have been declared unopposed to the Rajya Sabha.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









