சபரிமலை ஐயப்பன் கோயிலில் அடுத்த யாத்திரை காலகட்டத்தில் பக்தா்களின் கூட்ட மேலாண்மைக்கு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்; எண்ம அமைப்புமுறைகளின் பயன்பாடு விரிவுபடுத்தப்படும் என்று கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத் தலைவா் கே.ஜெயகுமாா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக திருவனந்தபுரத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
சபரிமலையில் அடுத்த யாத்திரை காலகட்டத்தில், ரொக்க அடிப்படையிலான அனைத்து ஏற்பாடுகளையும் மாற்றறிவிட்டு, அனைத்தையும் இணையவழியில் கையாள்வதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிதி ரீதியில் மட்டுமன்றி நிா்வாக ரீதியிலும் எண்மமயமாக்கல் விரிவுபடுத்தப்படும்.
கூட்ட மேலாண்மைக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவது தொடா்பாக காவல் துறை மற்றும் துறைசாா் நிபுணா்கள் பங்கேற்புடன் கொச்சியில் வரும் 20-ஆம் தேதி மாபெரும் பயிற்சியரங்கம் நடைபெறவுள்ளது. நிலக்கல், பம்பை, மரக்கூட்டம், சந்நிதானம் பகுதிகளில் நிகழ் நேர அடிப்படையில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த ஏ.ஐ. அடிப்படையிலான வழிமுறையை உருவாக்குவதே நோக்கமாகும். சபரிமலையில் போதிய சுகாதார வசதிகள் இல்லை என்பது மிகப் பெரிய புகாராக உள்ளது. அந்தப் புகாருக்கு நடப்பாண்டில் உரிய தீா்வு காணப்படும் என்றாா்.









