இ20 பெட்ரோல் எனப்படும் எத்தனால் கலந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட காரின் டேங்கு மூடிப் பகுதியை எறும்புகள் சூழ்ந்திருப்பது போன்ற விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் இன்று வைரலாகியிருந்த நிலையில், பாரத் பெட்ரோலியம் இது குறித்து உண்மையை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் இ20 என்ற எத்தனால் கலந்த பெட்ரோல் விற்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, எத்தனால் கலந்த பெட்ரோல் வாகனங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற கூற்றுகள் வெளியாகி வந்தன.
ஆனால், திடீரென, காரின் பெட்ரோல் டேங்க் மூடி மீது ஏராளமான எறும்புகள் சூழ்ந்திருப்பது போன்ற விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், எத்தனால் கலந்த பெட்ரோல் காரணமாகவே எறும்புகள் மொய்ப்பதாகக் கூறப்பட்டிருந்தது.
அதில் உண்மையில்லை, பொய்யான தகவலை பரப்பும் விடியோ என்று பாரத் பெட்ரோலியம் விளக்கம் கொடுத்துள்ளது.
காரில், பெட்ரோல் நிரப்பும் மூடி அருகே ஏராளமான எறும்புகள் சூழ்ந்திருக்கும் விடியோ வெளியாகியிருந்தது. ஆனால், அந்த விடியோவில், ஒட்டுமொத்த வாகனமும் காண்பிக்கப்படவில்லை. மூடியின்மீது இ-20 என்ற ஸ்டிக்கர் இருந்தது. அதன் மூலம், அந்தக் கார் எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கும் என்பது தெரிய வருகிறது. மேலும், எத்தனால் கலந்திருப்பதால், வாகனங்களை எறும்புகள் மொய்ப்பதாக அதில் பதிவிடப்பட்டிருந்தது. பலரும் அதனை உண்மை என நம்பி தங்களது வலைத்தளப் பக்கங்களில் பகிரத் தொடங்கினர்.
இது குறித்து பாரத் பெட்ரோலிய கழகம் விளக்கம் கொடுத்துள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளியான தகவல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பெட்ரோலுடன் கலப்பதற்குப் பயன்படுத்தப்படும் எரிபொருள் தர எத்தனால், இறுதிப் பொருளில் உள்ள எஞ்சிய சர்க்கரைகளை நீக்கும் நொதித்தல் மற்றும் காய்ச்சி வடிகட்டுதல் செயல்முறைகள் முடிந்தபிறகே வெளிக் கொணரப்படுகிறது. மேலும், எரிபொருள் எத்தனாலில் பூச்சிகளை விரட்டும் தன்மையும் இணைந்தே உள்ளன.
கலக்கும்போது, எத்தனாலின் உள்ளார்ந்த வாசனையைவிட, பெட்ரோலின் தனித்துவமான ஹைட்ரோகார்பன் வாசனையே மேலோங்கி நிற்கிறது.
மேலும், எத்தனால் கலந்த பெட்ரோல், ஆவியாகும் தன்மை குறைவு என்பதால், பெட்ரோல் டேங்க் மூடிக்கு அருகே பூச்சிகள், எறும்புகள் வருவதற்கான சாத்தியம் இல்லை.
எத்தனால் கலந்த எரிபொருள் மற்றும் பூச்சிகளை ஈர்க்கும் திறனுக்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை. எனவே, சமூக வலைத்தளத்தில் பரவும் இந்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றது, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத தகவல் என்று தெரிவித்துள்ளது.
Summary
A denial has been issued stating that the viral video claiming ants were swarming petrol tanks containing ethanol-blended fuel is not true.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








