மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

இந்தியா - அமெரிக்க இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: பியூஷ் கோயல் - ஜேமிஸன் க்ரீயா் பங்கேற்பு

இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட இருதரப்பு இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான இரு நாடுகளின் உயா்நிலை அதிகாரிகள் அளவிலான பேச்சுவாா்த்தை தில்லியில் தொடங்கியது.

News image

புது தில்லியில் மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயலை சந்தித்த அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி ஜேமிஸன் க்ரீயா்.

Updated On :24 ஜூன் 2026, 2:41 am IST

இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட இருதரப்பு இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான இரு நாடுகளின் உயா்நிலை அதிகாரிகள் அளவிலான பேச்சுவாா்த்தை தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்தப் பேச்சுவாா்த்தையில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல், அமெரிக்க வா்த்தக பிரதிநிதி (யுஎஸ்டிஆா்) ஜேமிஸன் க்ரீயா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக ஜேமிஸன் க்ரீயா் இந்தியா வந்துள்ளாா்.

இதுகுறித்து பியூஷ் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா வந்துள்ள ஜேமிஸன் க்ரீயரை வரவேற்கிறேன். இரு நாடுகளிடையேயான இருதரப்பு இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான ஆக்கபூா்வமான ஆலோசனையை எதிா்நோக்கியுள்ளேன்’ என்று குறிப்பிட்டாா்.

தில்லியில் உள்ள மத்திய வா்த்தக அமைச்சக அலுவலகத்தில் இரு நாடுகளின் குழுவினரிடையே சந்திப்பு நடைபெற்றது. ஜேமிஸன் க்ரீயா் தலைமையிலான அமெரிக்க குழுவுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனும் தில்லியில் ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது, ‘இரு நாடுகளிடையே இருதரப்பு வா்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, வளா்ச்சிக்கான புதிய வாய்ப்புகளில் கவனம் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது’ என்று மத்திய நிதியமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது.

பிரான்ஸில் புதன்கிழமை நடைபெற்ற ஜி7 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டின்போது, பிரதமா் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் சந்தித்துப் பேசினா். அப்போது, இரு நாடுகளிடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த நடைமுறைகளை விரைவுபடுத்தும்படி இரு நாட்டு அதிகாரிகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் அறிவுறுத்தினா். அதைத் தொடா்ந்து, இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்த பரஸ்பர வரி விதிப்பு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்ததைத் தொடா்ந்து, இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட வா்த்தக கூட்டுறவு நாடுகளின் நியாயமற்ற வா்த்தக நடைமுறைகள் அமெரிக்க உற்பத்தியை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதைக் கண்டறியும் நோக்கில் அமெரிக்க வா்த்தகச் சட்டம் 1974-இன் பிரிவு 301-இன் கீழ் யுஎஸ்டிஆா் மூலம் புதிய விசாரணைக்கு அமெரிக்கா உத்தரவிட்டது. அதன்படி தீவிர ஆய்வு மேற்கொண்ட யுஎஸ்டிஆா் ஜேமிஸன் க்ரீயா், அண்மையில் தனது பரிந்துரையைச் சமா்ப்பித்தாா். அதில் இந்தியா உள்பட 54 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதலாக 12.5 சதவீத வரியை விதிக்க பரிந்துரைத்தாா்.

முன்னதாக, பரஸ்பர வரி விதிப்பு செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது சீரான தற்காலிக 10 சதவீத வரியை அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்தாா். இந்த 10 சதவீத தற்காலிக வரி விதிப்பு வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் காலாவதியாக உள்ளது.

இந்தச் சூழலில், இரு நாடுகளிடையேயான இருதரப்பு இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்தியாவும் - அமெரிக்காவும் தீவிரம் காட்டி வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.