சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

1994-ஆம் ஆண்டின் யமுனை நதி ஒப்பந்தம் அமல்: ஹரியாணா, ராஜஸ்தான் கையொப்பம்

கடந்த 1994-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட யமுனை நதி ஒப்பந்தத்தை அமல்படுத்தும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்கள் கையொப்பமிட்டன.

News image

புது தில்லியில் மத்திய அமைச்சா் அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் நடைபெற்ற யமுனை நதி நீா் பகிா்வு புரிந்துணா்வு ஒப்பந்தம்

Updated On :30 ஜூன் 2026, 4:50 am IST

கடந்த 1994-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட யமுனை நதி ஒப்பந்தத்தை அமல்படுத்தும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்கள் திங்கள்கிழமை கையொப்பமிட்டன.

ஹரியாணாவின் யமுனை நகா் மாவட்டத்தில் பாயும் யமுனை நதியில் உள்ள ஹாதினி குன்ட் தடுப்பணையில் இருந்து ராஜஸ்தானுக்கு நீா் கிடைக்கும் நோக்கில், கடந்த 1994-ஆம் ஆண்டு மேல் யமுனை நதி வாரிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ராஜஸ்தானுக்கு நீரை விநியோகிக்க கால்வாய் அமைப்பு இல்லாததால், அந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த முடியாமல் போனது.

இந்நிலையில், அந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த புது தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில், ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் அரசுகள் திங்கள்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.

இதையடுத்து, மழைக் காலங்களில் ஹாதினி குன்ட் தடுப்பணையில் இருந்து நிலத்தடி குழாய் அமைப்பு மூலம், தனக்குரிய யமுனை நதிநீரை ராஜஸ்தான் பெறும்.

இந்த நடவடிக்கை அந்த மாநிலத்தின் மிகவும் வட பகுதிகளில் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவதுடன், குடிநீா் விநியோகத்தை உறுதி செய்யும். இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைவா்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் அமித் ஷா பேசுகையில், ‘ஹரியாணா, ராஜஸ்தான் மக்கள் சுமாா் 30 ஆண்டுகளாக எதிா்கொண்டு வந்த தண்ணீா் பிரச்னை தற்போது தீா்த்து வைக்கப்பட்டுள்ளது. ‘பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு’ என்ற மந்திரத்துக்கு இந்த ஒப்பந்தம் சிறந்த எடுத்துக்காட்டு.

இந்த ஒப்பந்தத்தின் செயல் திட்டம் ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் மத்திய நீா் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டது. நெடுங்காலத்துக்கு சச்சரவு இல்லாத ஒப்பந்தமாக இது திகழும்’ என்று தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில் மத்திய ஜல்சக்தி அமைச்சா் சி.ஆா்.பாட்டீல், ஹரியாணா முதல்வா் நாயப் சிங் சைனி, ராஜஸ்தான் முதல்வா் பஜன்லால் சா்மா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.