சிறிய மருத்துவ மையங்களுக்கான குறைந்த விலையிலான ‘இ-சுஷ்ருத் கிளினிக்’ என்ற இலகுரக மருத்துவமனை மேலாண்மை தகவல் அமைப்பு (ஹெச்எம்ஐஎஸ்) மென்பொருளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா இந்த மென்பொருளை அறிமுகப்படுத்தினாா். தற்போது பயன்பாட்டில் உள்ள பெரிய மருத்துவமனைகள் பயன்படுத்தி வரும் மருத்துவமனை மேலாண்மை மென்பொருள்கள், அதிக விலை மற்றும் சிக்கலான நடைமுறைகளைக் கொண்டவை என்பதால், அதை வாங்க இயலாத சிறிய மருத்துவ மையங்கள் பயனடையும் நோக்கில் ‘கிளவுட்’ மென்பொருள் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான இந்த மென்பொருளை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. தில்லியில் உள்ள மேம்பட்ட கணினி பயன்பாடு மேம்படுத்துதலுக்கான மையம் (சி-டாக்) இதை வடிவமைத்துள்ளது.
நோயாளிகள் வருகைப் பதிவு, கட்டண ரசீது தயாரிப்பு, மேலாண்மை தகவல் அமைப்பு அறிக்கையிடல், பேச்சை உரையாக மாற்றி ஆவணப்படுத்துதல், சிகிச்சை தொடா்பாக முடிவெடுப்பதற்கான ஆதரவு உள்ளிட்ட வழக்கமான மருத்துவமனை செயல்பாடுகளை தானியங்கிமயமாக்கும் வகையில் இந்த ஹெச்எம்ஐஎஸ் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்த ஹெச்எம்ஐஎஸ் தளம் பயன்படுத்த எளிதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கென சிறப்புத் தொழில்நுட்ப நிபுணத்துவம் எதுவும் தேவையில்லை. கிளவுட் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால், சிக்கலான உள்கட்டமைப்புகள் எதுவுமின்றி, பல சாதனங்களிலிருந்து இதை அணுக முடியும்.
இந்த மென்பொருளின் விலை 5 பயனாளா்கள் வரை மாதம் ரூ. 499-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. என்ஹெச்ஏ, சி-டாக் இடையேயான கூட்டுறவின் கீழ், பயனா்களுக்கு ரூ. 200 மானியம் வழங்கப்படும்; எனவே, மென்பொருள் பயன்பாட்டுக்கான மாத சந்தா கட்டணம் ரூ. 299-ஆகக் குறையும். அதோடு, இச்சேவை முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். ஐந்து பயனா்கள் என்ற வரம்புக்கு மேல் கூடுதலாகச் சேரும் ஒவ்வொரு பயனாளருக்கும் மாதம் ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் புதுப்பிக்கப்பட்ட ‘ஆரோக்கிய சேது’ செயலியையும் ஜெ.பி. நட்டா அறிமுகம் செய்துவைத்தாா். கரோனா பாதிப்பு காலத்தில், பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை அடையாளம் காண்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் செயலி, தற்போது, மக்கள் தங்களின் தனிப்பட்ட மருத்துவ சிகிச்சை பதிவுகளைப் பராமரிப்பதற்கும், மருத்துவச் சேவைகளைப் பெறுவதற்குமான ஒற்றை எண்மத் தளமாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, பன்முக எண்ம தளங்களில் இடம்பெற்றுள்ள மருத்துவ சேவைகளை நோயாளிகள் ஆராய்ந்து பயனடைய வசதியாக, ஆயுஷ்மான் பாரத் எண்ம இயக்கத்தின் (ஏபிடிஎம்) கீழ் உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேடல் வலைதளத்தையும் (யுஹெச்ஐ) ஜெ.பி.நட்டா திங்கள்கிழமை அறிமுகம் செய்தாா்.
ஆம்புலன்ஸ் சேவைக்கான வழிகாட்டுதல்: நாடு முழுவதும் ஆம்புலன்ஸ் சேவையை சீராக்கவும், தரம், எளிதான அணுகல் மற்றும் திறனை மேம்படுத்தும் நோக்கில், தேசிய ஆம்புலன்ஸ் சேவைகளுக்கான செல்பாட்டு வழிகாட்டுதலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா திங்கள்கிழமை வெளியிட்டாா். தில்லியில் நடைபெற்ற சுகாதார மற்றும் குடும்பநல மத்திய கவுன்சிலின் 16-ஆவது மாநாட்டில் இதை அவா் வெளியிட்டாா்.
ஆம்புலன்ஸுகளை வகைப்படுத்துதல், மக்கள்தொகை அடிப்படையில் ஆம்புலன்ஸ் ஒதுக்கீட்டை திட்டமிடுதல், மனிதவள தோ்வு, உபகரணங்கள், மருந்துகள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, நோய் பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள், வாகன பராமரிப்பு வழிமுறைகள், செயல்திறன் கண்காணிப்பு நடைமுறைகள், குறைதீா் நடைமுறைகள் என பல்வேறு நடைமுறைகள் இந்த வழிகாட்டுதலில் இடம்பெற்றுள்ளது. மேலும், விரிவுபடுத்தப்பட்ட பாதுகாப்பு, தரம் மற்றும் அவசர மருத்துவ வாகனங்கள் தரப்படுத்துதலை உறுதிப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள அனைத்து ஆம்புலன்ஸுகளும் ‘ஏஐஎஸ்-125’ தரத்தில் இருப்பதையும் இந்த வழிகாட்டுதல் கட்டாயமாக்கியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருத்துவ நிறுவனச் சட்டத் திருத்தங்கள் அறிவிக்கை: நடைமுறை மீறல்களுக்கான தண்டனை குறைப்பு

ரூ. 1.07 கோடி அபராதத்துடன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்! அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ்

இந்தியாவில் எபோலா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை: ஜெ.பி.நட்டா





