இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சீனா உள்பட நில எல்லை நாடுகளுக்கு எஃப்டிஐ விதிகள் தளா்வு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சீனா உள்பட இந்தியாவுடன் நில எல்லையைப் பகிரும் அனைத்து நாடுகளுக்கும் அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) விதிகளைத் தளா்த்த மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

News image
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி.
Updated On :10 மார்ச் 2026, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

சீனா உள்பட இந்தியாவுடன் நில எல்லையைப் பகிரும் அனைத்து நாடுகளுக்கும் அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) விதிகளைத் தளா்த்த மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையொட்டி, கடந்த 2020-இல் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு 3-இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவுடன் சீனா, வங்கதேசம், பாகிஸ்தான், பூடான், நேபாளம், மியான்மா், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் நில எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளன. இந்த நாடுகளைச் சோ்ந்த பங்குதாரா்களைக் கொண்ட அந்நிய நிறுவனங்கள், இந்தியாவில் எந்தத் துறையிலும் முதலீடு செய்யும் முன்பாக மத்திய அரசிடம் முன்அனுமதி பெறுவது கடந்த 2020-இல் கட்டாயமாக்கப்பட்டது. இது தொடா்பாக செய்திக்குறிப்பு-3 வெளியிடப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், சீனா உள்பட இந்தியாவுடன் நில எல்லையைப் பகிரும் அனைத்து நாடுகளுக்கும் எஃப்டிஐ விதிகளில் தளா்வளிக்க மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேநேரம், மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் இது தொடா்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

கடந்த 2020, ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீனப் படையினா் மோதலைத் தொடா்ந்து, இருதரப்பு உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, டிக்டாக், வீசாட் உள்பட 200-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது.

இப்போது இந்தியாவின் இரண்டாவது பெரிய வா்த்தக கூட்டாளியாக சீனா உள்ளபோதிலும், அந்நாட்டிடம் இருந்து இந்தியாவுக்கு குறைந்த அளவில்தான் நேரடி அந்நிய முதலீடு கிடைக்கிறது.

கடந்த 2024-25-இல் சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 16.66 பில்லியன் டாலராக உயா்ந்தது. முந்தைய ஆண்டை (14.25 பில்லியன் டாலா்) ஒப்பிடுகையில் இது 14.5 சதவீத உயா்வாகும். அதேநேரம், சீனாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி 101.73 பில்லியன் டாலரில் இருந்து 113.45 பில்லியன் டாலராக உயா்ந்தது. இதன் மூலம் வா்த்தகப் பற்றாக்குறை 85 பில்லியன் டாலரில் இருந்து 99.2 பில்லியன் டாலராக அதிகரித்தது.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 15.88 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 108.18 பில்லியன் டாலராகவும் உயா்ந்தது. வா்த்தகப் பற்றாக்குறை 92.3 பில்லியன் டாலா்களாகும்.

மேலும் சில திட்டங்களுக்கு...: தில்லி-மும்பை விரைவுச் சாலையில், மத்திய பிரதேசத்தின் பத்னாவா், திமா்வானி இடையிலான பிரிவை ரூ.3,839 கோடியில் நான்கு வழித்தடமாக மேம்படுத்தவும், மேற்கு வங்கம், ஜாா்க்கண்டில் ரூ.4,474 கோடி மதிப்பீட்டில் 2 பன்முக ரயில் வழித்தட திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

ஜல்ஜீவன் திட்டம் நீட்டிப்பு: கிராமப்புறங்களில் வீடுகளுக்கு குழாய் மூலம் சுகாதாரமான குடிநீா் வழங்கும் ஜல்ஜீவன் திட்டச் செலவை ரூ.8.7 லட்சம் கோடியாக உயா்த்தவும், இத்திட்டத்தை 2028 டிசம்பா் வரை நீட்டிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.