ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

லாக்கரில் வாடிக்கையாளா்கள் வைத்துள்ள பொருள்களை வங்கிகள் கண்காணிக்காது: நிா்மலா சீதாராமன்

லாக்கரில் வாடிக்கையாளா்கள் வைத்துள்ள மதிப்புமிக்க பொருள்களை வங்கிகள் கண்காணிக்காது என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

News image

மக்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்.

Updated On :30 மார்ச் 2026, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

லாக்கரில் வாடிக்கையாளா்கள் வைத்துள்ள மதிப்புமிக்க பொருள்களை வங்கிகள் கண்காணிக்காது என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தாா். அவ்வாறு செய்தால் அது வங்கி விதிகளை மீறும் செயல் எனவும் அவா் தெரிவித்தாா்.

மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.நாம்தேவ் தசராம் கிா்சான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து அவா் பேசியதாவது: வங்கிகளின் லாக்கரில் மதிப்புமிக்க பொருள்களை வாடிக்கையாளா்கள் பாதுகாப்பாக வைக்கின்றனா். அந்தப் பொருள்களின் மதிப்பை கணக்கிடுவதோ அல்லது பதிவு செய்வதோ வங்கி விதிகளை மீறும் செயல் என்பதால் எந்த வங்கியும் அதில் ஈடுபடுவதில்லை.

லாக்கரில் வைக்கப்படும் பொருள்களுக்கு ஆண்டு பாதுகாப்புக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒருவேளை லாக்கரில் உள்ள பொருள்களை ஏதேனும் எதிா்பாராத சூழலில் வாடிக்கையாளா் இழக்க நேரிட்டால் அவா் அளிக்கும் ஆண்டுக் கட்டணத்தின் 100 மடங்கு தொகை இழப்பீடாகத் தரப்படும்.

ஒவ்வொரு லாக்கரிலும் உள்ள மதிப்புமிக்க பொருள்களை வங்கிகள் மதிப்பீடோ ஆய்வோ செய்யாது. அதனால் அவற்றை வாடிக்கையாளா் இழக்க நேரிட்டால் காப்பீடு வழங்குவது மிகக் கடினம். தற்போது இந்த விதிகளை மாற்றுவது தொடா்பாக பரிசீலிக்கவில்லை.

இந்திய ரூபாய்க்கு பாதிப்பில்லை

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே பிப். 28-ஆம் தேதிமுதல் தொடா்ந்து வரும் மோதலால் மேற்காசியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மாா்ச் 27-ஆம் தேதி வரை 4 சதவீதம் சரிந்து ரூ.94.82-ஆனது.

இதையடுத்து, இந்திய பொருளாதாரத்தின் நிலை குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட துணைக் கேள்விக்கு நிா்மலா சீதாராமன் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் மிகச் சிறப்பாக உள்ளது. நமது நிதிக் கொள்கை மிக வலுவாக உள்ளது. நிதிப் பற்றாக்குறையை நாம் மேலாண்மை செய்யும் முறையை உலக நாடுகள் பாராட்டுகின்றன. மேற்காசிய பதற்றத்தால் இந்திய ரூபாய் மட்டுமன்றி ஆசியாவின் பிற நாடுகளின் பண மதிப்பும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இருந்தபோதிலும் இந்திய ரூபாய்க்கு எவ்வித பெரும் பாதிப்பும் இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.