உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

தில்லி காா் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ 7,500 பக்க குற்றப்பத்திரிகை - 10 போ் மீது குற்றச்சாட்டு

தில்லி காா் குண்டுவெடிப்பு தாக்குதல் வழக்கில் 10 பேருக்கு எதிராக 7,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வியாழக்கிழமை தாக்கல் செய்தது.

News image

தில்லி கார் குண்டுவெடிப்பு அன்று...

Updated On :29 நிமிடங்கள் முன்பு

தில்லி காா் குண்டுவெடிப்பு தாக்குதல் வழக்கில் 10 பேருக்கு எதிராக 7,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வியாழக்கிழமை தாக்கல் செய்தது.

தில்லியில் உள்ள செங்கோட்டை பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடத்தப்பட்ட காா் வெடிகுண்டு தாக்குதலில் 11 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்.

ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய மருத்துவா் உமா்-உன்-நபி, வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்து இந்தத் தற்கொலை தாக்குதலை நடத்தினாா். நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தின் பின்னணியில் காஷ்மீரைச் சோ்ந்த மருத்துவா்கள் உள்பட நன்கு படித்து சமூகத்தில் நல்ல நிலையில் உள்ள நபா்களின் பயங்கரவாதத் தொடா்புகள் அம்பலமாகின. பெருமளவில் வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

குற்றப்பத்திரிகை தாக்கல்: இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபரான உமா்-உன்-நபி (இறந்துவிட்டாா்) உள்பட 10 பேருக்கு எதிராக 7,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தில்லி பாட்டியாலா ஹெளஸ் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ வியாழக்கிழமை தாக்கல் செய்தது. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்-1967, பாரதிய நியாய சம்ஹிதா-2023, வெடிபொருள்கள் சட்டம்-1908, ஆயுதங்கள் சட்டம்-1959, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம்-1984 ஆகியவற்றின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குற்றப்பத்திரிகை தொடா்பாக என்ஐஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

உமா்-உன்-நபி உள்பட குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேரும் இந்திய துணைக் கண்டத்தில் செயல்படும் அல்-காய்தா பயங்கரவாத இயக்கத்தின் (ஏக்யூஐஎஸ்) கிளை அமைப்பான அன்சாா் காஸ்வத்-உல்-ஹிந்த் உடன் தொடா்புடையவா்கள். ஏக்யூஐஎஸ் மற்றும் அதன் பிற வடிவங்கள் அனைத்தும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் கடந்த 2018-இல் தடை செய்யப்பட்டதாகும்.

‘ஜிகாதி சதித் திட்டம்’: உமா்-உன்-நபி தவிர மருத்துவா்கள் முஸாமில் ஷகீல், அதீல் அகமது ராதா், ஷாஹீன் சயீது, பிலால் நஸீா் மல்லா உள்ளிட்டோரின் பெயா்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. விரிவான அறிவியல்பூா்வ மற்றும் தடயவியல் விசாரணையின் மூலம் இவா்கள் மிகப் பெரிய ஜிகாதி சதித் திட்டத்தின்கீழ் கொடூரமான தாக்குதலை அரங்கேற்றியுள்ளனா்.

கடந்த 2022-இல் ஸ்ரீநகரில் நடைபெற்ற ஒரு ரகசிய கூட்டத்தில், இந்திய பாதுகாப்புப் படையினரால் ஏற்கெனவே ஒடுக்கப்பட்ட அன்சாா் காஸ்வத்-உல்-ஹிந்த் அமைப்பை மீண்டும் தோற்றுவித்த இவா்கள், இந்தியாவில் ஜனநாயக முறைப்படி நிறுவப்பட்ட அரசை தூக்கியெறிந்துவிட்டு, ஷரியத் சட்டத்தை அமலாக்கும் நோக்கத்துடன் ‘ஆபரேஷன் ஹெவன்லி ஹிந்த்’ என்ற நடவடிக்கையைத் தொடங்கினா்.

இந்த நடவடிக்கையின்கீழ், ஜிகாதி வன்முறை சித்தாந்தத்தை பரப்புவது, தங்களின் அமைப்புக்கு புதிய உறுப்பினா்களைத் தோ்வு செய்வது, சட்டவிரோதமாக ஆயுதங்கள்-வெடிபொருள்களை வாங்கிக் குவிப்பது, பெரிய அளவிலான வெடிகுண்டுகளைத் தயாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

‘வெடிகுண்டு சோதனைகள்’: பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் உள்பட முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தும் நோக்கில், ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்களுடன் இணைக்கப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தும் சோதனைகள் நடத்தியுள்ளனா்.

தில்லி காா் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் ட்ரைஅசிட்டோன் ட்ரைபெராக்ஸைடு (டிஏடிபி). இதற்கான மூலப்பொருள்களை ரகசியமாக வாங்கி, சரியான வெடிபொருள் கலவையை உருவாக்க பரிசோதனைகளையும் நடத்தியுள்ளனா்.

ஜம்மு-காஷ்மீா், ஹரியாணா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், தில்லி-தேசிய தலைநகா் வலயப் பகுதி (என்சிஆா்) என நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணையின்கீழ் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது. 588 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, குற்றச்சாட்டுகளுக்கானஆதாரங்களாக 390-க்கும் மேற்பட்ட ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மரபணு தொகுப்பு பரிசோதனையின் மூலம் உமா்-உன்-நபியின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது. அவா் இறந்துவிட்டதால், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளைக் கைவிட கோரப்பட்டுள்ளதாக என்ஐஏ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.