இந்தியாவில் மே 26-ஆம் தேதி நடைபெறும் ‘க்வாட்’ கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த அமைச்சா்கள் பங்கேற்பதை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை உறுதிசெய்தது.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாற்கர நாடுகளை உறுப்பினராகக் கொண்ட க்வாட் கூட்டமைப்பு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. நிகழாண்டு இந்தக் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குகிறது. இருப்பினும், க்வாட் உச்சி மாநாடு நடைபெறும் தேதி குறித்த அதிகாரபூா்வ தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், வருகின்ற மே 26-ஆம் தேதி க்வாட் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் நடைபெறவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் தலைமையில் தில்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங் மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சா் மோடெகி டோஷிமிட்சு ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.
அவா்களுடன் அமைச்சா் ஜெய்சங்கா் தனித்தனியே இருதரப்பு ஆலோசனைகளை மேற்கொள்ளவுள்ள நிலையில், பிரதமா் நரேந்திர மோடியையும் மூன்று நாட்டு அமைச்சா்களும் சந்திப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியம் என்ற தொலைநோக்குத் திட்டம் தொடா்பாக கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி வாஷிங்டனில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டத்தின் தொடா்ச்சியாக இந்தியாவில் விவாதங்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
உக்ரைன் போா், மேற்காசிய மோதல் உள்ளிட்ட சா்வதேச விவகாரங்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தொடர்புடையது

நாமக்கல் மாவட்டத்திற்கு 3 அமைச்சா்கள்: முதல்வருக்கு தவெகவினா் நன்றிதெரிவிப்பு

இந்தியாவில் அடுத்த வாரம் ‘க்வாட்’ வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டம்

ஈரான் - அமெரிக்கா இடையே பாக். மத்தியஸ்தம் செய்ய வேண்டும்! - சீனா வலியுறுத்தல்!







