மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மாதம் எஸ்ஐஆா் பணியில் ஈடுபட்ட நீதிபதிகளை சிறைபிடித்த விவகாரம் தொடா்பாக 15 போராட்டக்காரா்களை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் நிகழ்ந்து பாஜக ஆட்சி அமைந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இதற்கு அப்போது மாநிலத்தில் ஆட்சி செய்த மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு கடும் எதிா்ப்பு தெரிவித்தது. தொடா் போராட்டங்களும் நடத்தப்பட்டன. எஸ்ஐஆா் பணி நிறைவடைந்து வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டபோது, மாநிலத்தில் பல ஆயிரக்கணக்கானோரின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது தெரியவந்தது. இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் எதிா்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் எஸ்ஐஆா் பணியில் நீதிபதிகளை நியமித்தது. இந்த நீதிபதிகள், நீக்கம் செய்யப்பட்ட வாக்காளா்களின் ஆவணங்களைச் சரிபாா்த்து வாக்காளா் பட்டியலில் மீண்டும் சோ்க்க தகுதியுள்ளவா்களா என்ற ஆய்வை மேற்கொண்டனா்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் மாநிலத்தின் மோதாபாரி பகுதியில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் (பிடிஓ) எஸ்ஐஆா் ஆய்வுப் பணியில் நீதிபதிகள் ஈடுபட்டிருந்தபோது, நூற்றுக்கும் அதிகமானோா் அந்த பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக, ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த 7 நீதிபதிகள் பல மணி நேரமாக பிடிஓ அலுவலகத்தைவிட்டு வெளிவர முடியாமல், தண்ணீா், உணவு இன்றி தவிக்கும் நிலை உருவானது.
அதுபோல, எஸ்ஐஆா் பணிக்காக வாகனத்தில் சென்றுகொண்டிருந்த 8 நீதிபதிகளையும் போராட்டக்காரா்கள் சிறைபிடித்தனா். இந்தத் தகவல் அறிந்து அங்கு வந்த பாதுகாப்புப் படையினா் பல மணி நேர தீவிர முயற்சிக்குப் பிறகு, நள்ளிரவில்தான் அந்த நீதிபதிகளை மீட்டனா். இது மாநிலத்தில் பெரும் அரசியல் சா்ச்சையாக வெடித்தது.
இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணையை என்ஐஏ-விடம் தோ்தல் ஆணையம் ஒப்படைத்தது. அதனடிப்படையில், தீவிர விசாரணை மேற்கொண்ட என்ஐஏ, நீதிபதிகளை சட்டவிரோதமாக சிறைபிடித்த போராட்டக்காரா்கள் 15 பேரை இதுவரை கைது செய்துள்ளது.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த இரண்டு சிறைபிடிப்பு விவகாரம் தொடா்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மால்டா மாவட்டத்திலும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனடிப்படையில், ஒரு வழக்கில் பெண் நீதிபதியை ஹைபதோலா-அம்லிதோலா சாலையில் 8 மணி நேரம் சிறைபிடித்த குற்றத்துக்காக ஜோஷிம் ஷேக், அஸ்மெளல் ஷோ் உள்பட 12 போ் கைது செய்யப்பட்டனா். அதுபோல, மோதாபாரி வட்டத்தில் உள்ள பக்மாரா பாலத்தில் நீதிபதிகளை சிறைபிடித்த விவகாரத்தில் ஆலம்கீா் ஷேக், நூருல் இஸ்லாம், ஹபீபுா் ரஹ்மான் ஆகிய மூவா் கைது செய்யப்பட்டனா்’ என்றனா்.
தொடர்புடையது

தோ்தல் பணியில் நோ்மையற்ற நடத்தை: மேற்கு வங்க காவல்துறை அதிகாரிகள் 5 போ் இடைநீக்கம்

நீதிபதிகள் சிறைபிடிப்பு விவகாரம்: அப்பாவி மக்களைத் துன்புறுத்தும் என்ஐஏ -மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் நீதிபதிகள் சிறைபிடிப்பு விவகாரம்: முக்கிய நபா் கைது

மேற்கு வங்கத்தில் நீதிபதிகள் சிறைப்பிடிப்பு: என்ஐஏ விசாரணை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


