கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா வியாழக்கிழமை ராஜிநாமா செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2023-ஆம் ஆண்டு கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, தலா இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வா் பதவியை பகிா்ந்துகொள்வதாக கட்சி மேலிடத் தலைவா்களின் முன்னிலையில் சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் கருத்து நிலவி வருகிறது.
இந்நிலையில், இரண்டரை ஆண்டு ஆட்சிக் காலம் நிறைவடைந்துவிட்டதால், முதல்வா் சித்தராமையா மாற்றப்படுவாா் என காங்கிரஸ் வட்டாரத்தில் பல மாதங்களாக விவாதம் நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக தில்லியில் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, அக்கட்சியின் அமைப்பு பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், கா்நாடக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா உள்ளிட்டோருடன் சித்தராமையாவும், டி.கே. சிவக்குமாரும் செவ்வாய்க்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனையில் முதல்வர் பதவியிலிருந்து விலகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் சித்தராமையா ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும், தேசிய அளவில் சித்தராமையாவுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கவும் மேலிடம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு நாள் நிகழ்வில் இன்று காலை சித்தராமையா கலந்துகொண்டார்.
அப்போது பதவி விலகல் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “இதுதொடர்பாக நாளை பேசுகிறேன்” என்று பதிலளித்தார்.
சித்தராமையாவைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கர்நாடக முதல்வராக்க முன்மொழிவுகள் எழுந்த நிலையில், உடல்நிலை காரணமாக அவர் மறுத்துவிட்டதை தொடர்ந்து, டி.கே. சிவக்குமாரை கட்சித் தலைமை நியமித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை நாளை சந்திக்க காங்கிரஸ் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, தனது ஜோதிடரும், ஆன்மீக குருவுமான பெல்லூர் சங்கரநாராயணன் துவாரகநாத்தை செவ்வாய்க்கிழமை மாலை தொடர்புகொண்டு, டி.கே. சிவக்குமார் ஆசிப் பெற்றுள்ளார்.
‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்திடம் பேசிய துவாரகநாத், “முதல்வராக நியமிக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து வெளியாவதற்காக அவர் காத்திருக்கிறார். மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை மாநிலத்தில் அமல்படுத்தவும், ஊழலைக் கட்டுப்படுத்தவும், நல்லாட்சியை உறுதி செய்யவும், பெங்களூருவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கவும் நான் அவருக்கு அறிவுறுத்தினேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இத்துடன் கர்நாடகத்தில் அமைச்சரவை மாற்றமும் நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Will Siddaramaiah Resign Tomorrow? D.K. Shivakumar to Become Karnataka Chief Minister!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








