மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வர் அஜீத் பவாரின் மகனும், மாநில சட்டப்பேரவை உறுப்பினருமான ரோஹித் பவார், சிபிஐ அலுவலகத்துக்கு பூட்டுடன் சென்றதால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஜனவரி 28 ஆம் தேதி, மகாராஷ்டிர மாநிலம், பாராமதி விமான நிலையத்தில், துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவார் பயணித்த தனி விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்துக்குப் பின்னால் ஒரு சதித்திட்டம் இருக்கக்கூடும் என்று குற்றம்சாட்டி வரும் ரோஹித் பவார், தனியார் விமான நிறுவனத்தை ஒரு பெரிய சக்தி பாதுகாத்து வருவதாகவும் அவர் கூறி வருகிறார்.
மேலும், மாநில சிஐடி காவல்துறை விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக ரோஹித் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ரோஹித் வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், 4 மாதங்களாகியும் விசாரணையில் முன்னேற்றம் இல்லையென்றும், சிபிஐ விசாரணைக்கு மாற்றவில்லை என்றும் ரோஹித் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், புணேவில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை சங்கிலி மற்றும் பூட்டுடன் ரோஹித் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் ரோஹித் பேசியதாவது:
“இதுவரை சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படவில்லை. இந்த நிலையில், சிபிஐ அதிகாரிகள் எதற்கு? ஏசி அறையில் அமர்ந்து என்ன செய்கிறார்கள்?
எனவே, சிபிஐ அலுவலகத்தை பூட்டிவிட்டால், இந்த தேவையில்லாத செலவினம் முழுமையாக நிறுத்தப்படும். ஒரு வழக்கை சிபிஐக்கு மாற்றுவது அவ்வளவு கடினமா?
ஒரு காலத்தில், சர்வதேச அமைப்புகளுடன் ஒப்பிடும்போது சிஐடி மிகவும் மதிக்கப்பட்ட ஒரு விசாரணை அமைப்பாக இருந்தது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்கூட, வழக்குகள் விரைவாகத் முடிக்கப்பட்டன. ஆனால், கடந்த 6 மாதங்களாக நாங்கள் முயற்சிகள் எடுத்தும் அதிகாரிகள் சிறப்பாக செயல்படவில்லை.
சிஐடி எங்களது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல், பயனற்ற துறைகள் மூடப்பட வேண்டும், துரதிர்ஷ்டவசமாக சிஐடியும் அவற்றில் ஒன்றாகிவிட்டது.
அஜீத் பவார் விமான விபத்து வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் நாங்கள் தகவல்களைக் கோரினோம், ஆனால் பதில்கள் தாமதப்படுத்தப்பட்டன அல்லது மறைக்கப்பட்டன. மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை பொறுப்பை தட்டிக்கழித்தது. இந்த விசாரணை மேலும் தாமதமின்றி சிபிஐயிடம் ஒப்படைக்கபடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
Ajit Pawar's Plane Crash - Rohit Pawar Arrives at CBI Office Carrying a Lock
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









