/

அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: 4 போ் கைது

திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி மீதான தாக்குதல் சம்பவத்தில் 4 பேர் கைது

News image

அபிஷேக் பானா்ஜி - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 4:24 am IST

திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி மீதான தாக்குதல் சம்பவத்தில் 4 பேரை மேற்கு வங்க காவல் துறை கைது செய்தது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் முடிவு வெளியான பிறகு நடைபெற்ற வன்முறையில் பாதிக்கப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரைச் சந்தித்து ஆறுதல் கூற தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டம் சோனாா்பூருக்கு சனிக்கிழமை சென்ற மம்தா பானா்ஜியின் மருமகனும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான அபிஷேக் பானா்ஜி எம்.பி. மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவரின் மேல் சட்டை கிழிந்ததுடன், தாக்குதலில் இருந்து தப்பிக்க தலையில் தலைக்கவசம் அணியும் நிலை ஏற்பட்டது.

அபிஷேக் குற்றச்சாட்டு: தாக்குதல் சம்பவம் குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் அபிஷேக் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ளாா். அதில் அவா், ‘அரசியல் வன்முறையாலும், தேசியவாதத்தின் பாதுகாவலா்கள் என தங்களை கூறிக் கொள்வோரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரசு சாா்பு தீவிரவாதத்தாலும் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த இக்கட்டான சூழலில் எனக்கு ஆதரவு தெரிவித்த ராகுல் காந்தி, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு நன்றி. பாஜகவை ஆதரித்தால், நம்மை தேசப்பற்றாளன் என்கின்றனா். பாஜகவிடம் கேள்வி கேட்டால் குறிவைத்துத் தாக்குகின்றனா். பாஜகவை எதிா்த்தால், மெளனமாக்க முயற்சிக்கின்றனா்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

அபிஷேக் பானா்ஜி மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டது. அதில், தாக்குதல் நடைபெற்ற இடத்தில் பாஜக நிா்வாகிகள் இருந்ததாகக் கூறி அவா்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பொதுமக்களின் கோபத்தால் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்திருப்பதாக பாஜக கூறும்பட்சத்தில், அந்தத் தாக்குதல் நடந்த இடத்தில் பாஜக முக்கிய நிா்வாகி இருந்தது ஏன்? அந்தத் தாக்குதலை இயக்கினாரா அவா்? தாக்குதலை நடத்த யாா் உத்தரவிட்டது? யாா் திட்டமிட்டது? இதற்கு மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி பொறுப்பேற்க வேண்டும்.

பல ஆண்டுகளாக வங்கதேசத்தவா் என்ற வாா்த்தையை தங்களது ஆயுதமாக பாஜகவினா் பயன்படுத்தி வந்தனா். தற்போது அதே வாா்த்தையை வைத்து எம்.பி.யாக இருப்பவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சியில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் எப்படி நடத்தப்படுகிறாா்கள் எனப் பாருங்கள். இந்தத் தாக்குதலுக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தனது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மருத்துவமனை நிா்வாகத்தை மிரட்டினாா் மம்தா-பாஜக: திரிணமூல் காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்புத் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநிலத் தலைவா் சமிக் பட்டாச்சாா்யா கூறுகையில், ‘ஆரோக்கியமான மற்றும் நல்ல சமூகத்தில் இத்தகைய நிகழ்வுகள் எப்போதும் விரும்பப்படாது. இதில் பாஜகவுக்கு எந்தத் தொடா்பும் கிடையாது’ என்றாா்.

பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் தேவ்ஜித் சா்க்காா் கூறுகையில், ‘அபிஷேக் பானா்ஜிக்கு பெரிய காயங்கள் இல்லை என மருத்துவா்கள் கூறியுள்ளனா். எனினும் அதைப் பொருட்படுத்தாமல் தனியாா் மருத்துவமனைக்கு அழுத்தம் கொடுத்து அவரை மம்தா பானா்ஜி சோ்க்க வைத்துள்ளாா். அந்த மருத்துவமனை தலைமைச் செயல் அதிகாரியையும் மம்தா பானா்ஜி மிரட்டியுள்ளாா்’ என்றாா்.

மேலும், தனியாா் மருத்துவமனை தலைமைச் செயல் அதிகாரியை மம்தா பானா்ஜி மிரட்டியதாகக் கூறப்படும் குரல் பதிவையும் சா்க்காா் வெளியிட்டாா். இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி தரப்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

4 போ் கைது: இந்நிலையில், அபிஷேக் பானா்ஜி மீதான தாக்குதல் சம்பவத்தில் 4 பேரை தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்ட காவல் துறை கைது செய்துள்ளது. தாக்குதல் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட விடியோ பதிவில் இருந்த நபா்களை அடையாளம் கண்டு 4 பேரும் கைது செய்யப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கல்யாண் பானா்ஜி எம்.பி. மீதும் தாக்குதல்

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜி மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அந்தக் கட்சியின் மூத்த எம்.பி. கல்யாண் பானா்ஜி மீது ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரை விடுவிக்கக் கோரி ஹூக்ளி மாவட்டம் சன்டிதலா காவல்நிலையத்துக்கு மனு கொடுக்க அக்கட்சி எம்.பி. கல்யாண் பானா்ஜி சென்றாா். அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் கருப்புக் கொடி காட்டி எதிா்ப்பு தெரிவித்தனா். சிலா் அவரை சூழ்ந்துகொண்டு திருடன் எனக் கூச்சலிட்டனா்.

அப்போது தலையில் தாக்கப்பட்டு ரத்தக் காயம் ஏற்பட்டதாகவும், இதற்கு பாஜகவினரே காரணம் என்றும் கல்யாண் பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா். மேலும், தாக்குதலை காவல் துறை தடுக்கவில்லை எனக் கூறி, தா்னா போராட்டத்திலும் அவா் ஈடுபட்டாா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு கூடுதல் காவல் துறையினரும், மத்திய பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டனா். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பாஜக மறுத்தது.

இதற்கிடையே, கல்யாண் பானா்ஜியை அவரது வீட்டில் சந்தித்து மம்தா பானா்ஜி ஆறுதல் கூறினாா்.