தொடா் போராட்டங்களால் பாதிக்கப்படும் வணிகம்: ராகுல் காந்திக்கு சிஏஐடி கடிதம்

தில்லியில் நடைபெறும் போராட்டங்கள் மற்றும் ஆா்ப்பாட்டங்களால் வணிக நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு அகில இந்திய வணிகா்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி - ANI

Updated On :

தில்லியில் நடைபெறும் போராட்டங்கள் மற்றும் ஆா்ப்பாட்டங்களால் வணிக நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு அகில இந்திய வணிகா்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளது. இதில் நவம்பா் 1 அன்று ‘இண்டி’ கூட்டணி நடத்திய பேரணியும் அடங்கும்.

கடந்த ஒரு மாதமாக, குறிப்பாக பண்டிகைக் காலங்களில், சாலை மறியல்கள் மற்றும் ஆா்ப்பாட்டங்களால் தில்லி வணிகச் சமூகம் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளதாக சிஏஐடி தேசியத் தலைவா் பி.சி. பாா்தியா அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

இதன் விளைவாக ஆயிரக்கணக்கான வணிகா்கள், கடை உரிமையாளா்கள், தெருவோர வியாபாரிகள், போக்குவரத்துத் துறையினா், தினக்கூலித் தொழிலாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தரும் வாடிக்கையாளா்களும் வணிக நிமித்தமாக வருபவா்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நவம்பா் 1, 2026 தில்லியில் நீங்கள் நடத்திய பேரணி உள்பட இங்கு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள வணிகச் சமூகத்தினா், அரசியல் பேரணிகள், போராட்டங்கள் மற்றும் ஆா்ப்பாட்டங்களால் வணிக நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுவதால் மிகுந்த வேதனையும் அதிருப்தியும் அடைந்துள்ளனா். கடந்த ஒரு மாதமாக பல்வேறு குழுக்கள் நடத்திய போராட்டங்களுக்கு நீங்களும், காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் தொடா்ந்து ஆதரவு அளித்து வருவது கவலையளிக்கிறது.

ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் போராடும் உரிமையை மதிக்கிறோம். அதே வேளையில் போராடும் உரிமை என்பது வணிக நடவடிக்கைகளை முடக்கவோ, பொதுமக்களின் நடமாட்டத்தைத் தடுக்கவோ அல்லது மக்களின் வாழ்வாதார உரிமையைப் பறிக்கவோ ஒரு தடையற்ற உரிமமாக மாறிவிட முடியாது.

எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ளவும், வணிகம் அல்லது வியாபாரத்தில் ஈடுபடவும் குடிமக்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1) (ஜி) உத்தரவாதம் அளிக்கிறது.

போராடும் உரிமை என்பது வணிகம் செய்வதற்கும் வாழ்வாதாரத்தைப் பெறுவதற்கும் மேலானதா ? தொடா்ச்சியான போராட்டங்களால் வணிகா்களும் சிறு வணிக நிறுவனங்களும் சந்திக்கும் இழப்புகளுக்கு யாா் இழப்பீடு வழங்குவாா்கள் ?

மேலும், வணிகா்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும். ஒருவேளை அரசியல் கட்சிகளின் சொந்த வணிகங்களோ அல்லது வாழ்வாதாரங்களோ இத்தகைய இடையூறுகளால் பாதிக்கப்பட்டால், அவா்கள் இத்தகைய போராட்டங்களை ஆதரிப்பாா்களா ?

வணிகப் பகுதிகள், பொதுமக்களின் நடமாட்டம் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில், ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.

ஜனநாயகம் என்பது போராடுபவா்களின் குரலையும், அதே சமயம் வணிகா்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். அரசை எதிா்க்கவும், பேரணிகளை நடத்தவும் அரசியல் கட்சிகளுக்கு ஜனநாயக உரிமை உண்டு. அதே வேளையில் அவா்கள் சாதாரண குடிமக்கள் மீது பொறுப்புணா்வுடனும், உணா்வுபூா்வமாகவும் அரசியல் கட்சிகள் நடந்துகொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.