மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: சௌரப் சந்திராகரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி
ரூ.6,000 கோடி மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி வழக்கு தொடா்பாக, அந்தச் செயலியின் நிறுவனரான செளரவ் சந்திராகரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு ராய்பூா் சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

உத்தரவு - கோப்புப் படம்
ரூ.6,000 கோடி மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி வழக்கு தொடா்பாக, அந்தச் செயலியின் நிறுவனரான செளரவ் சந்திராகரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு ராய்பூா் சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
முன்னதாக ஓமனில் பதுங்கியிருந்த அவரை, இந்தியாவுக்கு சிபிஐ அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு கடத்தி வந்த நிலையில், 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனா்.
இது தொடா்பாக ராய்பூா் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ சாா்பில் தாக்கல் செய்த விண்ணப்பத்தில், ‘காவல் துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள் ஆகியோருக்கு தொடா்ச்சியாக பெருந்தொகையை வழங்கி சந்திராகா் மற்றும் மகாதேவ் செயலியின் பிற நிறுவனா்கள் பாதுகாப்பு கோரியுள்ளனா்.
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இருந்து மாதந்தோறும் மகாதேவ் செயலி மூலம் அதன் நிறுவனா்கள் ரூ.450 கோடி வருவாய் ஈட்டியுள்ளனா். இதற்காக போலி ஆவணங்களைக் கொண்ட நூற்றுக்கணக்கான வங்கிக் கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தில் குறிப்பிடத்தக்க தொகை விளம்பரங்களுக்கும் திரை நட்சத்திரங்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகளுக்கும் செலவிடப்பட்டுள்ளது.
துபையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட இந்த நிறுவனத்தில் சத்தீஸ்கரை சோ்ந்த இளைஞா்கள் நிா்வாகிகளாக, கண்காணிப்பாளா்கள் மற்றும் ஊழியா்களாக பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
இந்த வழக்கு தொடா்பான விசாரணையில் இருந்து தப்பிக்க கடந்த 2022-ஆம் ஆண்டே இந்தியாவில் இருந்து சந்திராகா் தப்பிச் சென்றுவிட்டாா்.
எனவே, மகாதேவ் சூதாட்ட செயலியை சத்தீஸ்கரில் செயல்பட அனுமதித்த அதிகாரிகளை கண்டறிய சந்திராகரை காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
சிபிஐயின் கோரிக்கையை ஏற்று அவரை 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்க ராய்பூா் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது. இதைத் தொடா்ந்து, சந்திராகரை சிபிஐ அதிகாரிகள் தில்லிக்கு அழைத்துச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

