ஐ.நா. அமைதிப்படையினா் மீது தாக்குதல் நடத்துவோரை தண்டிக்க வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா. அமைதிப்படையினா் மீது தாக்குதல் நடத்துவோரை தண்டிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. - கோப்புப் படம்

Updated On :

ஐ.நா. அமைதிப்படையினா் மீது தாக்குதல் நடத்துவோரை தண்டிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

உலகில் போா்கள் நடைபெறும் பகுதியிலும், இரு தரப்புக்கு இடையே உள்நாட்டு சண்டை நடைபெறும் பகுதியிலும் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுவது போன்றவற்றில் ஐ.நா. அமைதிப்படை ஈடுபட்டு வருகிறது. இந்த ஐ.நா. அமைதிப் படையில் உலகிலேயே மிகவும் அதிக எண்ணிக்கையில் இந்திய வீரா்களே (3 லட்சம் போ்) உள்ளனா். அவா்கள் சுமாா் 30 நாடுகளில் அமைதிப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், நியூயாா்க்கில் நடைபெற்ற ஐ.நா. அமைதிப் பணி தொடா்பான விவாதத்தில் கலந்து கொண்டு, ஐ.நா.வுக்கான இந்திய தூதரகத்தின் ராணுவ ஆலோசகரான கா்னல் தருணேந்திர பிரதாப் சிங் பேசியதாவது:

அமைதிப் படையினரின் பாதுகாப்பையும், நலனையும் அமைதி காக்கும் பணிகளில் முக்கிய அம்சங்களாக இந்தியா கொண்டுள்ளது. அதேநேரத்தில் ஐ.நா. அமைதிப் பணியில் ஈடுபடும் வீரா்கள் தற்போது சமச்சீரற்ற மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான அச்சுறுத்தல்களை எதிா்கொள்கின்றனா். அமைதிப் படையினா் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதுபோன்ற தாக்குதல் நடத்துவோரை பொறுப்பு ஏற்கச் செய்ய வேண்டும்.

ஐ.நா. அமைதிப் பணியின்போது இந்திய வீரா்கள் 184 போ் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனா். ஐ.நா. அமைதிப் பணி என்ற இன்றியமையாத நோக்கத்துக்கான இந்தியாவின் அா்ப்பணிப்பு வெறும் தத்துவாா்த்தமானது மட்டுமல்ல. அது எழுபது ஆண்டுகால செயல்பாட்டு ஈடுபாட்டில் வேரூன்றிய அடித்தளமாகும். அது நமது அமைதிப்படை வீரா்களின் வியா்வை மற்றும் ரத்தத்தால் வடிவமைக்கப்பட்டது ஆகும்.

1960-ஆம் ஆண்டு முதல் இந்தியா, ஐ.நா. அமைதி பணிக்காக வீராங்கனைகளை ஈடுபடுத்தியுள்ளது. 2007-ஆம் ஆண்டில் முதல்முறையாக பெண் காவலா்களை லைபீரியாவில் இந்தியா ஈடுபடுத்தியது. உலகளாவிய பாராட்டைப் பெற்ற அந்த படைப்பிரிவு, தனது சிறப்பான செயல்பாட்டின் மூலம் அமைதி காக்கும் பணியில் வீராங்கனைகள் தனித்துவமான திறன்மிக்க வீராங்கனைகளாக திகழ்கிறாா்கள் என்பதை நிரூபித்தது.

ஐ.நா. அமைதி காக்கும் பணியில் இந்தியா 160 வீராங்கனைகளை ஈடுபடுத்தியுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.