காலிஸ்தான் பிரிவினைவாதி தொடா்ந்த வழக்கு! அஜீத் தோவல் மீது பொய்க் குற்றச்சாட்டுகள்: இந்தியா நிராகரிப்பு
தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், ‘ரா’ உளவு அமைப்பின் முன்னாள் தலைவா் சமந்த் கோயல் ஆகியோா் மீது காலிஸ்தான் பிரிவினைவாதி சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என இந்தியா நிராகரிப்பு

அஜீத் தோவல் - கோப்புப் படம்
அமெரிக்க நீதிமன்றத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னூன் தொடா்ந்த உரிமையியல் வழக்கில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் மற்றும் ‘ரா’ உளவு அமைப்பின் முன்னாள் தலைவா் சமந்த் கோயல் ஆகியோா் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை; அவதூறானவை என்று இந்தியா நிராகரித்துள்ளது.
இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பாணைகளை வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் கடந்த மாதம் வழங்கியதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்திருந்த நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கண்ட கருத்துகளைக் கூறியுள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான நீதிக்கான சீக்கியா்கள் (எஸ்எஃப்ஜே) அமைப்பின் சட்ட ஆலோசகா் பன்னூனை பல்வேறு குற்றச்சாட்டுகளின்கீழ் இந்திய புலனாய்வு அமைப்புகள் தேடி வருகின்றன.
இந்நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டில் இந்திய அதிகாரி ஒருவருடன் இணைந்து கூலிப்படை மூலம் பன்னூனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக அமெரிக்காவில் நிகில் குப்தா என்ற இந்தியா் கைது செய்யப்பட்டாா். அவா் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இதனிடையே, தன்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக அஜீத் தோவல், சமந்த் கோயல் மீது குற்றஞ்சாட்டியதுடன், அவா்களிடம் நஷ்டஈடு கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் பன்னூன் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில் அஜீத் தோவல், சமந்த் கோயல் ஆகியோருக்கு பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணைகளை வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் ஒரு தூதரகக் குறிப்புடன் கடந்த அக். 9-ஆம் தேதி வழங்கியதாக, நீதிமன்றத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கடந்த அக். 28-ஆம் தேதி தெரிவித்திருந்தது.
அமெரிக்க அரசு விளக்கம்: அந்தத் தூதரகக் குறிப்பில், ‘வெளிநாட்டு இறையாண்மை விலக்குரிமைச் சட்டத்தின்கீழ், மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுவதில் அரசுக்கு எந்த விருப்புரிமையும் கிடையாது. இதுவொரு நடைமுறையே; அரசின் நிலைப்பாடல்ல.
எந்தவொரு தற்காப்பு வாதங்களும் வழக்கு நிலுவையில் உள்ள நீதிமன்றத்திடமே முன்வைக்கப்பட வேண்டும். இந்தக் காரணத்தால், அமெரிக்காவில் உள்ள ஒரு வழக்குரைஞரை அணுக அறிவுறுத்தப்படுகிறது. வழக்கில் அமெரிக்க அரசு ஒரு தரப்பாக இல்லை. எனவே, மற்ற தரப்பினருக்காக அரசுத் தரப்பில் வாதாட இயலாது’ என்று விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், இந்திய அதிகாரிகளுக்கு வழக்கு ஆவணங்களை தில்லி நீதிமன்றம் மூலம் வழங்க அனுமதித்து, அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு: இது தொடா்பாக தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால், ‘இந்திய உயரதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை; அவதூறானவை. அடிப்படையற்ற இந்த வழக்கை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.
இந்தியாவில் நீதித் துறை ஆவணங்களை வழங்குவதற்கான கோரிக்கையை, மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் மூலமாக மட்டுமே அனுப்ப முடியும்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

