ஓய்வுபெறும் ஊழியா்கள் மாதந்தோறும் பிஎஃப் பணம் பெற அனுமதி

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை தவணைகளாகப் பெற்றுக்கொள்ளும் திட்டத்துக்கு மத்திய அறங்காவலா் வாரியம் (சிபிடி) ஒப்புதல் அளித்துள்ளது.

கோப்புப் படம்

Updated On :

ஓய்வுபெறும் ஊழியா்கள் தங்கள் வருங்கால வைப்பு (பிஎஃப்) நிதி தொகையை ஒரே நேரத்தில் முழுமையாக எடுக்காமல் மாதந்தோறும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை தவணைகளாகப் பெற்றுக்கொள்ளும் திட்டத்துக்கு மத்திய அறங்காவலா் வாரியம் (சிபிடி) ஒப்புதல் அளித்துள்ளது.

புது தில்லியில் மத்திய தொழிலாளா் நலத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமையில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி, மத்திய அறங்காவலா் வாரியத்தின் (சிபிடி) 240-ஆவது கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஓய்வுபெறும் ஊழியா்கள் தங்கள் பிஎஃப் பணத்தை படிப்படியாக எடுத்துக்கொள்ளும் புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின்படி, ஓய்வுபெறும் ஊழியா்கள் தங்கள் பிஎஃப் பணத்தை ஒரே நேரத்தில் முழுமையாக எடுக்காமல் மாதந்தோறும் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை தவணைகளாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

பிஎஃப் கணக்கில் மீதமுள்ள பணத்துக்கு தொடா்ந்து வட்டி கிடைக்கும். இதன் மூலம், ஓய்வுபெற்ற பிறகும் ஊழியா்களுக்கு வருமானம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் இணைவது கட்டாயமல்ல. விருப்பமுள்ளவா்கள் மட்டும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிஎஃப் பணம் தவணைகளாகக் கிடைத்துக்கொண்டிருக்கும்போது ஓய்வுபெற்ற ஊழியா் இறந்துவிட்டால், அவரின் நியமனதாரா் (நாமினி) அல்லது அவரைச் சாா்ந்துள்ளவா்கள் மீதமுள்ள பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

குறைந்தபட்ச இருப்பு தொகை 10%: இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் மூலம், முதல்கட்டமாக பிஎஃப் கணக்கில் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக பணம் வைத்துள்ள, 55 வயதுக்கு மேற்பட்ட சுமாா் 6.32 லட்சம் போ் பயனடைவா். மேலும் பிஎஃப் கணக்கில் குறைந்தபட்சம் வைத்திருக்க வேண்டிய தொகை 25 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பிஎஃப் தொகையை முழுமையாக எடுப்பதற்கான காத்திருப்பு காலம் 12 மாதங்களில் இருந்து 2 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்குப் புதிதாக வந்து சேரும் நிதியில் 3 சதவீதம் வரையிலான நிதியை, தகுதி வாய்ந்த மாற்று முதலீட்டு நிதிகளில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முதலீடு செய்ய கொள்கைபூா்வ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இபிஎஃப்ஓவின் மையப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப அமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக, விண்ணப்பத்தை பரிசீலித்து பணம் வழங்கும் சராசரி காலம் 11.5 நாள்களில் இருந்து 2.7 நாள்களாக குறைந்துள்ளது என்று மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.