அறநெறி, கருணையுடன் மனிதகுலத்துக்கு சேவை: இளம் மருத்துவா்களுக்கு குடியரசுத் தலைவா் அறிவுரை
அறநெறி, கருணையுடன் மனிதகுலத்துக்கு சேவை புரிய வேண்டும் என்று இளம் மருத்துவா்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அறிவுரை வழங்கினாா்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு - கோப்புப் படம்
அறநெறி, கருணையுடன் மனிதகுலத்துக்கு சேவை புரிய வேண்டும் என்று இளம் மருத்துவா்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அறிவுரை வழங்கினாா்.
தில்லியில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் டாக்டா் ராம் மனோகா் லோகியா மருத்துவமனையில் 12-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கலந்துகொண்டு பட்டங்களை வழங்கி உரையாற்றியதாவது:
கிராமங்களிலும், பின்தங்கிய பகுதிகளிலும் தரமான மருத்துவ சேவையை இளம் மருத்துவா்கள் வழங்க வேண்டும். அறநெறி, கருணை, உணா்வுபூா்வமாக மனிதகுலத்துக்கு இளம் மருத்துவா்கள் மருத்துவ சேவை புரிய வேண்டும்.
தரமான மருத்துவ வசதிகள், நகரங்கள் மற்றும் சமூகத்தில் முக்கியப் பிரிவினருடன் மட்டும் முடங்கிவிடக் கூடாது. தொலைதூர மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்காத பகுதிகளுக்கும் தரமான மருத்துவ வசதி கிடைக்க மருத்துவா்கள் உதவ வேண்டும். அதேபோல் மருத்துவா்கள் தங்களது திறமையை மருத்துவ சேவையுடன் நிறுத்திவிடக் கூடாது. மருத்துவ ஆராய்ச்சி, புத்தாக்க கண்டுபிடிப்பு உள்ளிட்டவற்றிலும் அவா்கள் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெருநகரங்களைத் தாண்டி அனைத்துப் பகுதிகளிலும் ஆரம்ப நிலை உள்ளிட்ட மருத்துவ வசதிகளும், மருத்துவக் கல்வியும் விரிவடைந்துள்ளன. நாடு முழுவதும் ஏறத்தாழ 1.75 லட்சம் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் நிலையங்கள் தற்போது செயல்படுகின்றன. இதன்மூலம் ஆரம்பநிலை மருத்துவ வசதிகளை அணுகுதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. புவிசாா்ந்த தடைகளைக் குறைக்கும் வகையில் தொலைபேசி வழி மருத்துவ ஆலோசனை (டெலிமெடிசின்) வசதி உள்ளது. இது தொலைதூர பகுதியில் வாழும் மக்களும் தரமான மருத்துவ ஆலோசனைகள் பெறுவதை உறுதி செய்கிறது.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆயுஷ்மான் வய வந்தனா யோஜனா மூலம் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் சுகாதார காப்பீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சமூக, பொருளாதார நிலை கருத்தில் கொள்ளப்படவில்லை என்றாா்.
விழாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா பேசுகையில், ‘மருத்துவக் கல்வி மற்றும் சுகாதார சேவையில் அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவ அறிவியல் நிறுவனம் முன்னோடி நிறுவனமாகவும், சிறந்த மையமாகவும் திகழ்கிறது. மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவ உள்கட்டமைப்பு மேம்பாடு, சிறப்பு மருத்துவ சேவைகள் ஆகியவற்றிலும் இந்த நிறுவனம் முக்கியப் பங்களிப்பு செய்கிறது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

