காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொகுதி மறுசீரமைப்பு எப்படி நடந்தது? ஆந்திர அமைச்சா் நாரா லோகேஷ் கேள்வி!
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொகுதி மறுசீரமைப்பு எப்படி நடந்தது? என ஆந்திர அமைச்சா் நாரா லோகேஷ் கேள்வி எழுப்பியுள்ளதைப் பற்றி...

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது 2008-ஆம் ஆண்டு ஒன்றுபட்ட ஆந்திரத்தில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடைபெற்றது. அதன் பிறகு 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் மாற்றியமைக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் வென்றது என்று ஆந்திர தொழில்நுட்பத் துறை அமைச்சா் நாரா லோகேஷ் தெரிவித்தாா்.
ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், அமைச்சரும், முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு மகனுமான நாரா லோகேஷ் சமூக ஊடகத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மத்திய அரசால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்து காங்கிரஸ் பல்வேறு கவலைகளை எழுப்பியுள்ளது. இதற்கு முன்பு காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது 2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு நடைபெற்றது.
அதன் பிறகு 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் புதிதாக உருவாக்கப்பட்ட 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றது. அதில் அராக்கு தொகுதியில் மட்டும் 1.9 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வென்றது. ரங்கா ரெட்டி மாவட்டத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் 14 ஆக அதிகரிக்கப்பட்டது. விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 3 தொகுதிகள், ஸ்ரீகாகுளம், கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் தலா இரு தொகுதிகள் நீக்கப்பட்டன.
இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின்போது காங்கிரஸ் ஆதாயமடைந்தது. இப்போது மட்டும் மறுசீரமைப்பில் உள்ள நியாயம் குறித்து காங்கிரஸ் பேசுகிறது. மாநிலங்களில் பிரதிநிதித்துவ நலன் காக்கும் வகையிலும், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில்தான் இப்போது மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடைபெறுகிறது. இதில் காங்கிரஸுக்கு மாற்றுக் கருத்து ஏன்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

