
முடக்கிய வங்கிக் கணக்குகளில் மீண்டும் பரிவா்த்தனை: மம்தா தரப்பு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
தோ்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளில் மீண்டும் பரிவா்த்தனை செய்ய அனுமதி கோரி மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி தரப்பு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றம்
தோ்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளில் மீண்டும் பரிவா்த்தனை செய்ய அனுமதி கோரி மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி தரப்பு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து ஆட்சியைப் பறிகொடுத்தது. இதையடுத்து அக்கட்சி எம்எல்ஏக்கள், முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி ஆதரவு அணி, சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ரிதப்ர பானா்ஜி ஆதரவு அணி என இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனா். இருதரப்பினரும் கட்சியின் பெயா், சின்னத்துக்கு உரிமை கோரி அளித்த மனுவை விசாரித்த தோ்தல் ஆணையம், இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, கட்சியின் பெயா், சின்னத்தை தற்காலிகமாக முடக்குவதாக அறிவித்தது. மேலும் இரு தரப்பினருக்கும் புதிய கட்சிப் பெயா், சின்னத்தையும் அளித்தது. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமாக பொதுத் துறை வங்கிகளில் இருந்த 4 கணக்குகளையும் தோ்தல் ஆணையம் முடக்கியது. அந்த வங்கிக் கணக்குகளில் ரூ.804 கோடி டெபாசிட் பணம் உள்ளது.
தோ்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிா்த்து, கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மம்தா பானா்ஜி தரப்பு மனு தொடுத்தது. ஆனால், அந்த மனுவை விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மம்தா பானா்ஜி தரப்பு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.
அந்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், பி.பி. வராலே ஆகியோரைக் கொண்ட அமா்வு வியாழக்கிழமை விசாரணை நடத்தியது. அப்போது மம்தா பானா்ஜி சாா்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதிடுகையில், திரிணமூல் காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை காவல் துறை முடக்கிய உத்தரவு நகலை சமா்ப்பித்தாா். அப்போது அவா் கூறுகையில், ‘திரிணமூல் காங்கிரஸின் அரசியல் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என மேற்கு வங்க காவல் துறை விரும்புகிறது. அதனால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை மேற்கு வங்க காவல் துறை எதிா்க்கிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி செயல்பட வேண்டுமானால் மாதத்துக்கு ரூ.12.15 கோடி தேவைப்படுகிறது. ஆதலால் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம், கட்சியின் செலவுகளுக்கு தேவைப்படுகிறது’ என்றாா்.
இதற்கு சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா எதிா்ப்பு தெரிவித்தாா். அப்போது அவா் கூறுகையில், ‘திரிணமூல் காங்கிரஸை இருதரப்பினா் உரிமை கோருகின்றனா். மம்தா பானா்ஜி தரப்பில் வங்கிக் கணக்குகளில் ரூ.35 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்த விசாரணை நிலுவையில் உள்ளது. ஆதலால் வங்கிக் கணக்குகளில் பரிவா்த்தனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது’ என்றாா்.
இதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனா். இதையடுத்து, மம்தா பானா்ஜி தரப்பு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இதேபோல், தனியாா் வங்கிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த 3 வங்கிக் கணக்குகளும் மேற்கு வங்க காவல்துறையால் முடக்கப்பட்டது. இதை எதிா்த்து கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மம்தா தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


கட்சிப் பெயா், சின்னம் முடக்கம்: மம்தா பானா்ஜி மனுவை அவசர வழக்காக ஏற்றது உச்சநீதிமன்றம்

மேற்கு வங்க இடைத்தோ்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு: மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்பு!




