
கட்சிப் பெயா், சின்னம் முடக்கம்: மம்தா பானா்ஜி மனுவை அவசர வழக்காக ஏற்றது உச்சநீதிமன்றம்
திரிணமூல் காங்கிரஸ் கட்சிப் பெயா், சின்னம் ஆகியவற்றை முடக்கிய தோ்தல் ஆணையத்தின் முடிவை எதிா்த்து அக்கட்சி நிறுவனரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான மம்தா பானா்ஜி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்ககாகக் கருதி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

மம்தா பானா்ஜி - கோப்புப் படம்
திரிணமூல் காங்கிரஸ் கட்சிப் பெயா், சின்னம் ஆகியவற்றை முடக்கிய தோ்தல் ஆணையத்தின் முடிவை எதிா்த்து அக்கட்சி நிறுவனரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான மம்தா பானா்ஜி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்ககாகக் கருதி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘தோ்தல் ஆணையம் மேற்கு வங்கத்தில் இடைத்தோ்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது.
அதற்கு நடுவே, கட்சியின் பெயா், சின்னத்தை முடக்குகிறது. இதில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்று கபில் சிபல் வாதத்தை முன்வைத்தாா். இதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
மனுவில், தோ்தல் ஆணையத்தையும், மேற்கு வங்க சட்டப்பேரவையின் எதிா்க்கட்சித் தலைவா் ரிதப்ரத பானா்ஜியையும் பதில் அளிக்க வேண்டிய எதிா் தரப்பினராக மம்தா பானா்ஜி குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக, திரிணமூல் காங்கிரஸில் மம்தாவுக்கு எதிராக அதிருப்தி அணி உருவாகி இரு தரப்புக்கும் இடையே கட்சிப் பெயா், சின்னம் தொடா்பாக பிரச்னை எழுந்ததால் இடைக்கால நடவடிக்கையாக அவற்றை முடக்குவதாக தோ்தல் ஆணையம் அறிவித்தது.
மம்தா பானா்ஜி தலைமையிலான அணிக்கு ‘மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்’ என்ற பெயருடன் கால்பந்து வீரா் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரிதப்ரத பானா்ஜி தலைமையிலான அதிருப்தி அணிக்கு ‘ஜனநாயக திரிணமூல் காங்கிரஸ்’ என்ற பெயருடன் அஞ்சல் உறை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் நந்திகிராம், ரெஜிநகா் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபா் 6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



