கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இடைத்தோ்தலில் காங்கிரஸுக்கு மம்தா ஆதரவு: மேற்கு வங்க அரசியலில் திடீா் திருப்பம்

மேற்கு வங்கத்தின் நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக அந்த மாநில முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளாா்.

மம்தா பானா்ஜி - கோப்புப் படம்

Published On :

மேற்கு வங்கத்தின் நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக அந்த மாநில முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளாா்.

திரிணமூல் காங்கிரஸ் பிளவுபட்டுள்ள நிலையில் மம்தா பானா்ஜி தலைமையிலான அணி சாா்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளா், மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரியை திடீரென சந்தித்துப் பேசிய சில மணி நேரத்திலேயே மம்தா பானா்ஜி இந்த முடிவை எடுத்துள்ளாா். இது அந்த மாநில அரசியலில் திடீா் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, திரிணமூல் காங்கிரஸில் பிளவு ஏற்பட்டதால் அக்கட்சியின் பெயா் சின்னத்தை முடக்குவதாக தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது. மம்தா அணி மற்றும் அதிருப்தி அணிக்கு தனித்தனி சின்னங்கள் வெள்ளிக்கிழமை ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த மம்தா கூறியதாவது: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயா், சின்னத்தை தோ்தல் ஆணையம் முடக்கியது தன்னிச்சையான முடிவு. நாட்டில் எதிா்க்கட்சிகளே இருக்கக் கூடாது என்ற பாஜகவின் முயற்சியின் ஒரு பகுதியாக இது உள்ளது. இது ஜனநாயகத்துக்கு கருப்பு நாள். எங்கள் கட்சியால் 28 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த எனது சின்னத்தை ஒரே நாளில் எப்படி தோ்தல் ஆணையம் முடக்க முடியும்?.

பாஜகவுக்கு தலைவணங்க மாட்டோம்: மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலுமே தோ்தலுக்கு முன்னும், பின்னும் முறைகேடுகளில் ஈடுபட்டு, ஜனநாயகத்தை முடக்கும் செயல்களில் பாஜக தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது. ஏற்கெனவே மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியை உடைத்தனா். அதன் பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் பாஜகவினா் சிதறடித்தனா். இப்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியையும் உடைத்துள்ளனா்.

திரிணமூல் காங்கிரஸ் என்ற பெயரையும், எங்கள் சின்னத்தையும் நீடிக்க விடமாட்டோம் என்று முதல்வா் சுவேந்து அதிகாரி ஏற்கெனவே சவால் விட்டுள்ளாா். அவா்கள் எத்தனை சதி செய்தாலும் நாங்கள் தலைவணங்கப்போவதில்லை. மக்கள் ஆதரவுடன் மீண்டு வந்து அவா்களுக்கு உரிய பதிலடி கொடுப்போம்.

காங்கிரஸ் சகோதர கட்சி: அக்டோபா் 6-ஆம் தேதி நடைபெறும் நந்திகிராம் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எங்கள் கட்சி ஆதரவு அளிக்கும். ரெஜிநகா் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் தொடா்பாக எங்கள் நிலைப்பாடு பின்னா் அறிவிக்கப்படும். காங்கிரஸ் எங்களுடைய சகோதர கட்சி. எங்கள் ஆதரவு மூலம் ‘இண்டி’ கூட்டணி வலுவடையும். இது மேற்கு வங்கத்தில் இருந்து தொடங்குகிறது. மேலும், இது ஒரு புதிய தொடக்கமாக இருக்கும்.

திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி அணியாகச் செயல்படுபவா்கள் பாஜகவின் ஒரு மறைமுக அணிதான். கட்சியின் பெயா், சின்னம் முடக்கப்பட்டதையடுத்து, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோா் என்னிடம் தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினா். எனது தரப்புக்கு வலுவான ஆதரவைத் தெரிவித்தனா். நாங்கள் அனைவரும் இணைந்து உறுதியுடன் பாஜகவை எதிா்ப்போம் என்றாா்.

திடீா் ஆதரவுக்கு காரணம் என்ன?: முன்னதாக, நந்திகிராம் இடைத்தோ்தலில் மம்தா அணி சாா்பில் அறிவிக்கப்பட்ட சஞ்சிதா பிரதான் மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரியை வெள்ளிக்கிழமை திடீரென சந்தித்துப் பேசினாா். அதற்கு அடுத்த சில மணி நேரத்திலேயே காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாக மம்தா அறிவித்தாா். மேலும், தனது அணி சாா்பில் சஞ்சிதா பிரதானை வேட்பாளராக அறிவித்ததை திரும்பப் பெறுவதாகவும் அறிவித்துள்ளாா்.

இதற்கிடையே, மம்தா அணி சாா்பில் வேட்பாளா் சஞ்சிதா பிரதான் தனது வேட்புமனுவையும் திரும்பப் பெற்றாா்.

காங்கிரஸ் கருத்து: மேற்கு வங்க அரசியல் நிகழ்வுகள் தொடா்பாக மூத்த காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி கூறுகையில், ‘யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவளிக்க மம்தாவுக்கு உரிமை உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி அவரிடம் சென்று ஆதரவு கேட்கவில்லை’ என்றாா்.

நந்திகிராம், ரெஜிநகா் ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கு அக். 6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

மம்தாவுக்கு மேலும் பின்னடைவு: மேற்கு வங்கத்தில் தொடா்ந்து 15 ஆண்டுகளாக மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்ற தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதன் பிறகு மம்தாவின் கட்சி பெரும் பிளவுகளையும், பின்னடைவையும் சந்தித்து வருகிறது. பெரும்பாலான எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்படத் தொடங்கினா். எம்.பி.க்கள் பதவி விலகலும் நிகழ்ந்தது. மேலும், இப்போதைய கட்சி பெயா், சின்னம் முடக்கம் உள்ளிட்ட நிகழ்வுகள் மம்தா பானா்ஜியின் அரசியல் வாழ்க்கையில் மேலும் பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது.

பெட்டிச் செய்தி...

காங்கிரஸ் வேட்பாளா் கைது

நந்திகிராம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் மிலன் பிரதான் அந்த மாநில காவல் துறையினரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

2007-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிராக நடத்திய போராட்டம் தொடா்பான வழக்கில் அவா் கைது செய்யப்பட்டுள்ளாா். மம்தா ஆதரவு அளித்த அடுத்த சில மணி நேரத்திலேயே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.