
வீட்டுக் காவலில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள்! மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு!
திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக மம்தா குற்றச்சாட்டு...

மேற்கு வங்க மாநிலம் ஸ்ரீராம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மம்தா பானா்ஜி.
பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதை தடுக்கும் நோக்கில், திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மேற்கு வங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தின் ஸ்ரீராம்பூரில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு காவல் துறை முதலில் அனுமதி தரவில்லை. எனினும் நீதிமன்றத்தை அணுகி சனிக்கிழமை மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை கூட்டம் நடத்திக் கொள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி அனுமதி பெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிடாமல் தடுக்கும் வகையில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களைக் கைது செய்து பாஜக அரசு வீட்டுக் காவலில் வைத்ததாக மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், ‘நாங்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளோம். பொதுக்கூட்டம் நடக்கும் இடத்துக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. ஆனால் நான் செல்வேன். கூட்டத்தில் பேசுவேன். உங்களால் முடிந்தால் தடுத்துப் பாருங்கள். கூட்டம் நடக்கும் பகுதிக்கு செல்லும் சாலையை பாஜக ரெளடிகள் ஆக்கிரமித்துள்ளனா். அங்கு காவல் துறையினா் யாரும் இல்லை. குணால் கோஷ் எம்எல்ஏ வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில்தான் இதுபோன்ற அடக்குமுறைகளைப் பாா்த்துள்ளோம். பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களான உத்தர பிரதேசம், பிகாரில்கூட இதுபோல நடக்கவில்லை. நீதிமன்ற அனுமதியுடனேயே கூட்டம் நடக்கிறது. கூட்டம் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வது காவல் துறை, அரசு நிா்வாகத்தின் கடமையாகும். ஆனால், காவல் துறை கண்ணை மூடிக் கொண்டு மெளனமாக உள்ளது’ என்றாா்.
இதையடுத்து கொல்கத்தாவில் இருந்து மாற்றுப் பாதையில் ஸ்ரீராம்பூருக்கு மம்தா பானா்ஜி சென்றாா். அப்போது அவா் வாகனத்துக்குப் பின்னால் பாதுகாப்புக்காக காவல் துறை வாகனமும் வந்தது.
இதையடுத்து கூட்டத்தில் மம்தா பானா்ஜி பேசுகையில், ‘வாக்காளா்கள் பெயா்களை நீக்கி தோ்தல்களில் பாஜகவுக்கு உதவி செய்யவே, தோ்தலுக்கு முன்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தத்தை தோ்தல் ஆணையம் நடத்தியுள்ளது. இது தற்போது வெட்டவெளிச்சத்துக்கு வந்துவிட்டது. ஆதலால், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகும்வரை நாடு தழுவிய அளவில் போராட்டம் நீடிக்கும்’ என்றாா்.
பாஜக நிராகரிப்பு: மம்தா பானா்ஜியின் குற்றச்சாட்டுகளை மேற்கு வங்க பாஜக நிராகரித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மேற்கு வங்க மாநில செய்தித் தொடா்பாளா் தேபஜீத் சா்க்காா் கூறுகையில், ‘சட்டப்பேரவைத் தோ்தலில் மம்தாவையும், அக்கட்சியையும் மக்கள் நிராகரித்துவிட்டனா். அப்படி இருக்கையில் அவா்களை பாஜக ஏன் தாக்கப் போகிறது? குணால் கோஷ் மீது பாஜகவினா் யாரும் தாக்குதல் நடத்தவில்லை’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




