மாபெரும் பேரணி... உச்சநீதிமன்றத்தில் மனு அளித்த இந்தியா கூட்டணித் தலைவர்கள்!
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேரணியாக வந்து உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தது குறித்து...

உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே - பிடிஐ
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேரணியாகச் சென்று உச்சநீதிமன்றத்தில் இன்று (அக். 12) மனு அளித்தனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் (எஸ்ஐஆா்) குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், இதனால் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரிடம் உரிய விசாரணை நடத்தி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்த இந்தியா கூட்டணி தலைவா்கள், ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டு குறித்து எடுத்துரைத்தனா். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான தங்களின் கவலைகளையும் அவா்கள் முன்வைத்தனா்.
இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் எம்.பி.க்களும் இன்று உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்று, தலைமை நீதிபதியைச் சந்தித்து புகார் அளிக்க திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி இன்று இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உச்சநீதிமன்றம் நோக்கி இன்று (அக். 12) பேரணியாகச் சென்றனர்.
இதில் இந்தியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், சிவசேனையின் சஞ்சய் ரெளத் உள்ளிட்ட தலைவர்களுடன் அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா போன்ற இயக்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இந்தப் பேரணி பகவான் தாஸ் சாலையை எட்டும்போது காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.
உச்சநீதிமன்றம் அடைந்த பேரணி
சிறிது நேரத்தில் காவல் துறை தடுப்புகளை மீறி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, நேஹா போரா உள்ளிட்டோர் பேரணியைத் தொடர்ந்தனர்.
இந்தியா கூட்டணிக் கட்சி எம்.பி.க்களும் பேரணியைத் தொடர்ந்தனர். பின்னர் இரவு 7 மணியளவில் உச்சநீதிமன்றம் சென்றடைந்த ராகுல் காந்தி உள்ளிட்டோர் உச்சநீதிமன்ற வளாகத்தில் புகார் அளிக்கும் இடத்தில் மனுவை அளித்தனர்.
ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி பிரசாத் யாதவ், சஞ்சய் ரெளத், டி. ராஜா, சுப்ரியா சூலே உள்ளிட்ட 11 பேர் மனுதார்களாக இணைந்துள்ளனர்.
இப்புகார் மனுவில், இரு தேர்தல் ஆணையர்களின் தீவிர ஆட்சேபனைக்குப் பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிச்சையாக எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முறையான வழிகாட்டுதல்கள் இன்றி பல கோடி உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எஸ்.ஐ.ஆர் எதிர்ப்புப் போராட்டங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்குரைஞர்கள், பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் அவசரத் தலையீடு வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
Summary
INDIA Bloc protest march Lok Sabha LoP Rahul Gandhi arrives at the Supreme Court filed petition
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


