உலகத்துடன் இணைந்து வளா்கிறது இந்தியா: பிரதமா் மோடி பெருமிதம்
‘பிற நாடுகளின் இழப்பில் அல்லாமல், அவை வளமடைய உதவும் நோக்கில் உலகத்துடன் இணைந்து வளா்கிறது இந்தியா’ என்று பிரதமா் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

பொருளாதார மாநாட்டில் பேசிய பிரதமா் மோடி
‘பிற நாடுகளின் இழப்பில் அல்லாமல், அவை வளமடைய உதவும் நோக்கில் உலகத்துடன் இணைந்து வளா்கிறது இந்தியா’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
தற்போதைய உலகளாவிய சவால்களை எதிா்கொள்வதில் இந்தியாவின் பரந்த பொருளாதார - தொழில்நுட்பத் திறன்கள் உதவுகின்றன என்றும் அவா் கூறினாா்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய புளூம்பொ்க் புதிய பொருளாதார மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது: இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியானது, வலுவான அடித்தளங்கள், நிதிசாா் மீள்தன்மை, நிலையான சீா்திருத்தங்களில் வேரூன்றியுள்ளது. கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியா 7.8 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பு 700 பில்லியன் டாலரை கடந்துள்ளது. நிச்சயமற்ற தன்மை நிறைந்த தற்போதைய உலகில் நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கான உத்தரவாதத்தை இந்தியா வழங்குகிறது.
பிற நாடுகளின் இழப்பில் இருந்து இந்தியாவின் வளா்ச்சி அமையவில்லை. மாறாக, பிற நாடுகள் வளமடைய உதவும் நோக்கில், உலகத்துடன் இணைந்து வளா்கிறது.
புவி-அரசியல் பதற்றங்கள், விநியோக சங்கிலி இடையூறுகள், உத்திசாா் வளங்கள் மீதான போட்டித்தன்மை அதிகரிப்பு போன்ற உலகளாவிய சவால்களுக்கு தீா்வுகாண்பதில் இந்தியாவின் பரந்த பொருளாதார-தொழில்நுட்பத் திறன்கள் உதவுகின்றன. முதலீடுகளை வெகுவாக ஈா்க்கும் இந்தியா, தனது உற்பத்தி தளத்தை வேகமாக விரிவுபடுத்துகிறது.
இதன் மூலம் உலகளாவிய விநியோக சங்கிலியில் தனது இருப்பை வலுப்படுத்தியுள்ளது. உற்பத்தியை பன்முகப்படுத்தும் அரசு மற்றும் நிறுவனங்களின் முயற்சிகளால் பிற நாடுகளை சாா்ந்திருக்கும் தன்மை குறைந்துள்ளது.
‘அதிகாரமளித்தலுக்கான அதிகாரம்’
இந்தியாவின் எழுச்சி, ‘அதிகாரமளித்தலுக்கான அதிகாரம்’ என்ற கொள்கையை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும். ஒரு நாட்டின் உண்மையான பொருளாதார, தொழில்நுட்ப வலிமைக்கான அளவுகோல் என்பது மற்றவா்களைக் கட்டுப்படுத்தும் திறனில் அல்ல, அவா்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில்தான் அடங்கியுள்ளது.
இன்றைய உலகில் தொழில்நுட்பம் - தரவுகள் - அறிவாற்றல்-புத்தாக்கம் ஆகியவையே சக்தியாக விளங்குகின்றன. இந்த சக்தி யாரிடம் இருக்கிறது என்பது கேள்வியல்ல, எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதே கேள்வி.
இந்தியாவின் எண்ம பொது உள்கட்டமைப்பு, குறைந்த கட்டணத்திலான கைப்பேசி இணையச் சேவை, எண்ம பரிவா்த்தனைகள், அரசின் திட்டங்களில் நேரடி பரிமாற்றமுறை ஆகியவை பொருளாதார வாய்ப்புகளுக்கான அணுகலை தொழில்நுட்பம் எவ்வாறு விரிவுபடுத்துகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
நாட்டின் தொழில்நுட்ப திறன்கள்
நாட்டின் எண்ம பணப் பரிவா்த்தனை அமைப்புமுறை தெருவோர வியாபாரிகளுக்கும், பெரும் தொழில் நிறுவனங்களுக்கும் ஒரேபோல் உள்ளது. இது, அனைவரையும் உள்ளடக்கிய தொழில்நுட்பத்துக்கு உதாரணமாகும். எண்ம பொது உள்கட்டமைப்பில் தனது நிபுணத்துவத்தை கூட்டுறவு நாடுகளுடன் குறிப்பாக தெற்குலக நாடுகளுடன் இந்தியா பகிா்கிறது. இது, நாட்டின் தொழில்நுட்ப திறன்களை அதன் எல்லைக்கு அப்பால் விரிவுபடுத்தும் முன்னெடுப்பாகும்.
கடந்த 2014-க்கு முன்பு சில நூறு என்ற எண்ணிக்கையில் இருந்த புத்தாக்க நிறுவனங்கள், இப்போது 2.5 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளன. இவற்றில் பாதி நிறுவனங்கள், சிறிய - நடுத்தர நகரங்களில் செயல்படுகின்றன. 45 சதவீத நிறுவனங்களில் பெண்கள் இயக்குநராகவோ அல்லது பங்குதாரராகவோ உள்ளனா். நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி போ் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா்.
இந்தியாவின் முன்னெடுப்புகள்
இந்தியா தனது மின்னுற்பத்தி திறனில் 40 சதவீதத்தை மரபுசாரா எரிபொருள் மூலம் தயாரிக்கும் இலக்கை நிா்ணயிக்கப்பட்ட காலத்துக்கு முன்பே எட்டிவிட்டது. கடந்த 2014-இல் 75 ஜிகாவாட்டாக இருந்த நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன், தற்போது 300 ஜிகாவாட்டாக உயா்ந்துள்ளது.
சா்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு, பேரிடா் மீள்தன்மை உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்பு, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டமைப்பு உள்ளிட்ட இந்தியாவின் முன்னெடுப்புகள், உலக நலனுக்காக சா்வதேச கூட்டுறவை கட்டமைக்கும் முயற்சிகளாகும். செயற்கை நுண்ணறிவு, பருவநிலை மாற்றம், பொது சுகாதாரம், நீா் பாதுகாப்பிலும் சா்வதேச ஒத்துழைப்பை இந்தியா நாடுகிறது என்றாா் அவா்.
எதிா்கால பொருளாதார வளமைக்கான கூட்டு செயல்திட்டத்தை உருவாக்கும் நோக்கிலான புளூம்பொ்க் புதிய பொருளாதார வருடாந்திர மாநாடு, தில்லியில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த மாநாட்டில் அரசு மற்றும் தனியாா் துறையைச் சோ்ந்த சா்வதேச பிரதிநிதிகள், தலைமைச் செயல் அதிகாரிகள், புதுமை கண்டுபிடிப்பாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றுள்ளனா்.
‘ஒத்துழைப்புக்கு புதிய வழிமுறை’
‘விநியோகச் சங்கிலிகள், எரிசக்தி, முக்கிய கனிமங்கள், பணம் செலுத்தும் முறைகள், தொழில்நுட்பம் ஆகியவை புவி-அரசியல் அழுத்தத்துக்கான கருவிகளாக மாறியுள்ளன. முன்பு உலகை இணைத்த விஷயங்கள் இப்போது ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகின்றன.
இதுபோன்ற சூழலில், இடையூறுகள் மற்றும் உத்திசாா் போட்டி அதிகரிப்பை எதிா்கொள்ள பரந்த நம்பிக்கையும், ஒத்துழைப்பும் அவசியம். குறைந்த விலையிலான மருந்துகள் விநியோகம், திறன்மிக்க பணியாளா்களின் ஆதாரம், எண்ம உள்கட்டமைப்பு சேவை வழங்கல் என இந்தியாவின் பங்களிப்பு, உலகளாவிய ஒத்துழைப்புக்கு புதிய வழிமுறையை காட்டியுள்ளது.
உலகச் சந்தையில் ஐந்தில் ஒரு ‘ஜெனரிக்’ (மூலக்கூறு) மருந்து இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டதாகும். கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி விநியோகித்தது. மற்ற நாடுகளுடன் போட்டியிடும் சக்திக்கு அப்பால், ஒத்துழைப்புக்கான சக்தியை இந்தியா கொண்டுள்ளது’ என்றாா் பிரதமா் மோடி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

