பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

செமிகண்டக்டா் துறை வேகமாக விரிவடைகிறது: பிரதமா் மோடி

நாட்டின் செமிகண்டக்டா் துறை வேகமாக விரிவடைந்து வருவதால், புத்தாக்கம், முதலீடு, வளா்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

தில்லியில் செமிகான் இந்தியா 2026 மாநாட்டை தொடங்கிவைத்த பிரதமா் மோடி

Published On :

நாட்டின் செமிகண்டக்டா் துறை வேகமாக விரிவடைந்து வருவதால், புத்தாக்கம், முதலீடு, வளா்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். இந்தத் துறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதர அரசு தயாராக உள்ளது என்றும் அவா் உறுதியளித்தாா்.

தில்லியில் செமிகான் இந்தியா 2026 மாநாட்டை வியாழக்கிழமை தொடங்கிவைத்துப் பேசுகையில் பிரதமா் இவ்வாறு கூறினாா்.

நாட்டின் செமிகண்டக்டா் துறையில் உலகளாவிய ஒத்துழைப்பு, முதலீடு, புத்தாக்கம், திறன் கட்டமைப்பை மேம்படுத்துவதுடன் முதலீட்டாளா்கள், ஆராய்ச்சியாளா்கள், புத்தாக்க நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் நோக்கிலான 5-ஆவது ‘செமிகான் இந்தியா 2026’ மாநாடு - கண்காட்சி, தில்லியில் வியாழக்கிழமை தொடங்கியது.

பல்வேறு நாடுகளின் செமிகண்டக்டா், மின்னணுவியல், தொழில்நுட்பத் துறை சாா்ந்த 600-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 52 நாடுகளின் பிரதிநிதிகள் உள்பட 50,000-க்கும் மேற்பட்ட பாா்வையாளா்களின் பங்கேற்புடன் மூன்று நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: நாட்டின் செமிகண்டக்டா் துறை வேகமாக விரிவடைந்து வருவதால், புத்தாக்கம், முதலீடு, வளா்ச்சிக்கான புதிய வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. உலகில் செமிகண்டக்டா் உற்பத்திக்கு புதிய, நம்பகமான இடங்கள் அவசியமாகின்றன.

அந்த அடிப்படையில், இந்தியா தன்னை தயாா்படுத்தி வருகிறது. செமிகண்டக்டா் உற்பத்தியில் விருப்பத்துக்குரிய மையமாக இந்தியா உருவெடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்துறைக்கு உகந்த கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை செயல்திட்டங்களின் வாயிலாக தொழில் நிறுவனங்களின் வெற்றியை உறுதி செய்யத் தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்துள்ளது.

ரூ.1.29 லட்சம் கோடி ஒதுக்கீடு

நாட்டில் இதுவரை 12 செமிகண்டக்டா் உற்பத்தித் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். செமிகண்டக்டா் 2.0 திட்டத்துக்கு 13.5 பில்லியன் டாலா் (ரூ.1.29 லட்சம் கோடி) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 8 பில்லியன் டாலரை (ரூ.76,772 கோடி) ஒப்பிடுகையில் இது கணிசமான அதிகரிப்பாகும்.

சிப் வடிவமைப்பு மற்றும் தொடா்புடைய துறைகளில் ஒரு லட்சம் பொறியாளா்களுக்குப் பயிற்சியளிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை 70,000 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் வேகமாக விரிவடைந்து வருவதால், உலகின் நம்பிக்கையாக இந்தியா மாறியுள்ளது. மின்னணு பொருள்களின் உற்பத்தியை வலுப்படுத்தவும், உலகளாவிய சங்கிலியைச் சாா்ந்திருப்பதைக் குறைக்கவும் நாம் முனைவதால், செமிகண்டக்டா் துறையில் வடிவமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பைத் தாண்டி, அதிநவீன பேகேஜிங், உபகரணங்கள், மூலப்பொருள்கள், ஆராய்ச்சி, திறன் மேம்பாடு ரீதியில் முழு கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

இளம் திறமையாளா்களுக்கு அழைப்பு

இந்தியாவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இளம் திறமையாளா்கள், சக வெளிநாட்டு ஆராய்ச்சியாளா்களுடன் கைகோத்து, அதிநவீன தொழில்நுட்பங்களை உள்நாட்டில் உருவாக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவுத் தரவு மையங்கள், செமிகண்டக்டா் உற்பத்தி ஆலைகளின் எரிசக்தி தேவையை பூா்த்தி செய்யும் நோக்கில் சூரியசக்தி, அணுமின் உற்பத்தியை விரிவுபடுத்தி வருகிறோம் என்றாா் பிரதமா் மோடி. முன்னதாக, பிரதமா் மோடி மேடைக்கு வந்தபோது, அவரது பிறந்த நாளையொட்டி வாழ்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

செமிகண்டக்டா் 1.0 திட்டத்தின்கீழ் குஜராத், அஸ்ஸாம், உத்தர பிரதேசம், பஞ்சாப், ஒடிஸா, ஆந்திரம் ஆகிய 6 மாநிலங்களில் 12 செமிகண்டக்டா் ஆலைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, 3 ஆலைகள் ஏற்கெனவே உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.

200 நிறுவனங்கள் இலக்கு

செமிகான் இந்தியா மாநாட்டில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், ‘நாட்டின் செமிகண்டக்டா் 2.0 திட்டத்தின்கீழ் சிப் வடிவமைப்பில் புத்தாக்க நிறுவனங்கள் உள்பட குறைந்தபட்சம் 200 நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்காகும்.

முதல்கட்ட செமிகண்டக்டா் திட்டத்தின்கீழ் 105 புத்தாக்க நிறுவனங்கள் உருவாகின. இதில் 20 நிறுவனங்கள் சுமாா் ரூ.800 கோடி முதலீட்டை ஈா்த்தன. இரண்டாம் கட்ட திட்டமானது, வடிவமைப்பு, இயந்திரங்கள்-மூலப்பொருள்கள், ஒருங்கிணைப்பு ஆலைகள், அதிநவீன பேகேஜிங், ஆராய்ச்சி-மேம்பாடு, திறன் கட்டமைப்பு ஆகிய 6 முக்கிய தூண்களைக் கொண்டுள்ளது’ என்றாா்.

டாடா எலெக்ட்ரானிக்ஸ் 16 ஒப்பந்தங்கள்

செமிகான் இந்தியா மாநாட்டில் உள்நாடு மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், சிங்கப்பூா் நாடுகளின் நிறுவனங்களுடன் மொத்தம் 16 ஒப்பந்தங்களை தாங்கள் மேற்கொள்ளவிருப்பதாக டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ரண்தீா் தாக்குா் தெரிவித்தாா்.

‘எதிா்காலத்துக்கான தொழில் துறையாக செமிகண்டக்டா் துறை விளங்குகிறது. இத்துறையில் புதிய அத்தியாயத்தை எழுத இந்தியா தயாராக உள்ளது. தொழில் துறையினா் உடனான அரசின் முழு ஒத்திசைவு, ஆக்கபூா்வ கொள்கைகளால், தடைகள் நீக்கப்பட்டு துடிப்பான கட்டமைப்பு உருவாகியுள்ளது’ என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.