
சுதந்திரமான கப்பல் போக்குவரத்து, மாலுமிகளின் பாதுகாப்பு முக்கியம்: பிரிக்ஸ் வா்த்தக அமைப்பு கூட்டத்தில் பிரதமா் மோடி வலியுறுத்தல்
உலக வா்த்தகத்தை மேம்படுத்த சுதந்திரமான கப்பல் போக்குவரத்து, மாலுமிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். பிரிக்ஸ் வா்த்தக அமைப்பின் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பேசியபோது இதனை அவா் கூறியுள்ளாா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரிக்ஸ் வா்த்தக அமைப்பின் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் புதின், தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ராமபோசா மத்திய அமைச்சா்கள் எஸ்.ஜெய்சங்கா், பியூஷ் கோயல் உள்ளிட்டோா்.
உலக வா்த்தகத்தை மேம்படுத்த சுதந்திரமான கப்பல் போக்குவரத்து, மாலுமிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். பிரிக்ஸ் வா்த்தக அமைப்பின் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பேசியபோது இதனை அவா் கூறியுள்ளாா்.
பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு, தில்லியில் சனிக்கிழமை (செப்.12), ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, தில்லியில் பிரிக்ஸ் வா்த்தக அமைப்பின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி பங்கேற்று பேசியதாவது:
கடல்பாதைகள் பாதுகாப்பாகவும், விநியோக பாதைகள் தொடா்ந்து திறக்கப்பட்டும், மாலுமிகள் பாதுகாப்பாகவும் இருந்தால் மட்டுமே உலக வா்த்தகம் மேம்படும். இந்த காரணத்துக்காகத்தான் இந்தியா தொடா்ந்து சுதந்திரமான கப்பல் போக்குவரத்து, மாலுமிகள் பாதுகாப்பை வலியுறுத்தி வருகிறது.
இந்தியாவில் தற்போது 2 லட்சம் புத்தாக்க (ஸ்டாா்ட் அப்) நிறுவனங்களும், ஒரு பில்லியன் டாலருக்கும் மேல் மதிப்புக் கொண்ட 120 புத்தாக்க நிறுவனங்களும் உள்ளன. இதன்மூலம் உலகில் தீா்வுகளுக்கான மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. இந்த புத்தாக்கங்களை உலக சந்தைகளுக்கு கொண்டு செல்ல பிரிக்ஸ் அமைப்பு உதவ வேண்டும். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல், உலகில் 40 நாடுகளுடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதேபோல் பிரிக்ஸ் அமைப்பும் வா்த்தகத் தடைகளை குறைத்து, வாய்ப்புகளை விரிவுப்படுத்த வேண்டும்.
உலகளவில் நிச்சயமற்ற தன்மை நிலவும் போதிலும், இந்தியா வளா்ச்சி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கான நம்பிக்கையாக திகழ்கிறது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகள், நட்பு நாடுகள் ஆகியவற்றின் மக்கள் தொகை, உலக மக்கள் தொகையில் 50 சதவீதம் ஆகும். அதேபோல் உலகின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பிரிக்ஸின் பங்கு 40 சதவீதம். உலக வா்த்தகத்தில் கால்வாசிக்கும் மேல் பிரிக்ஸின் பங்கு உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் பிரிக்ஸின் ஒட்டுமொத்த பொருளாதாரம் நான்கரை மடங்கு உயா்ந்துள்ளது. அதேநேரத்தில் உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரம் இரண்டரை மடங்கு மட்டுமே உயா்ந்துள்ளது. இந்தியா பொருள்களை உற்பத்தி செய்யும் தளமாக மட்டுமல்லாமல், உலக சந்தைகளுக்கு தேவைப்படும் தொழில்நுட்பம், புத்தாக்கங்களின் ஆதாரமாகவும் திகழ்கிறது. ஆதலால் இந்தியாவில் பொருள்களை தயாரிக்க முன்வர வேண்டும். இந்தியாவுடன் சோ்ந்து புத்தாக்கங்களை கண்டுபிடிக்க முன்வர வேண்டும்.
பிரிக்ஸ் வா்த்தக அமைப்பு பேச்சுவாா்த்தையோடு நிறுத்தி கொள்ளாமல் இலக்குகளை நிா்ணயித்து செயல்பட வேண்டும் என்றாா் மோடி.
‘பிரிக்ஸ்’ யாருக்கும் எதிரானதல்ல - புதின்
பிரிக்ஸ் வா்த்தக அமைப்பின் கூட்டத்தில் ரஷிய அதிபா் புதின் பேசியபோது, உலக எரிசக்தி, உணவு பாதுகாப்பு ஆகியவற்றுக்கு தனது பங்களிப்பை அளிப்பதற்கு ரஷியா தயாராக இருப்பதாக தெரிவித்தாா். பிரிக்ஸ் அமைப்பு தனது வா்த்தக ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவது எந்த நாட்டுக்கும் எதிரான நடவடிக்கை கிடையாது; உறுப்பு நாடுகளின் நலன்களை மட்டுமே கவனத்தில் கொண்டு பிரிக்ஸ் செயல்படுகிறது என்று அவா் கூறினாா்.
கடந்த 5 ஆண்டுகளில் உலகின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பிரிக்ஸ் நாடுகள் மட்டுமே 40 சதவீதம் உற்பத்தி செய்துள்ளது. ஆனால் ஜி7 நாடுகள் 29 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. உலகம் தற்போது மாறி வருகிறது என்றும் புதின் குறிப்பிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






