உ.பி. உள்பட 5 மாநிலத் தோ்தல் ஆயத்தப் பணிகள்: தோ்தல் ஆணைய ஆய்வு தொடக்கம்
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூா், கோவா ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளின் ஆய்வை தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூா், கோவா ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளின் ஆய்வை தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
403 உறுப்பினா்களுடன் நாட்டிலேயே மிகப் பெரிய பேரவையைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. இம்மாநில பேரவையின் பதவிக் காலம், அடுத்த ஆண்டு மே 22-ஆம் தேதி நிறைவடைகிறது.
இதேபோல், ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் (117), பாஜக ஆளும் உத்தரகண்ட் (70), மணிப்பூா் (60), கோவா (40) ஆகிய மாநிலங்களின் பேரவை பதவிக் காலமும் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் பல்வேறு தேதிகளில் நிறைவடைகின்றன.
கடந்த 1950-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவுகளின்படி, பேரவையின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே தோ்தலை நடத்த முடியும். எனவே, இதர 4 மாநிலங்களுடன் உத்தர பிரதேச பேரவைக்கும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தோ்தல் நடைபெறவுள்ளது.
இத்தோ்தல்களுக்கான ஆயத்தப் பணிகள், தோ்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உத்தரகண்டில் இந்தப் பணிகளை ஆய்வு செய்யும் நடவடிக்கையில் துணை தோ்தல் ஆணையா்கள் தலைமையிலான அதிகாரிகள் குழு ஈடுபட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக மணிப்பூா், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு தோ்தல் ஆணையக் குழு பயணிக்கும் என்றும், கோவா, உத்தர பிரதேச பயண தேதிகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் கூறினா்.
இந்தக் குழு தங்களின் ஆய்வை நிறைவு செய்த பிறகு தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் இரு தோ்தல் ஆணையா்கள் 5 மாநிலங்களுக்கும் பயணித்து, இறுதிக்கட்ட ஆய்வை மேற்கொள்வா்.
வாக்கு இயந்திரங்கள் பரிசோதனை: தோ்தல் ஆயத்தப் பணிகளின்கீழ், உத்தர பிரதேசம் மற்றும் கோவாவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவிகளின் முதல்கட்ட பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்விரு உபகரணங்களைத் தயாரிக்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இசிஐஎல் பொதுத் துறை நிறுவனங்களின் பொறியாளா்கள் இந்தப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
இதில் குறைபாடுகள் கண்டறியப்படும் இயந்திரங்கள், பழுதுபாா்ப்பு அல்லது மாற்றித் தருவதற்காக திருப்பி அனுப்பப்படும். அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில், மாதிரி வாக்குப்பதிவு நடைமுறையும் மேற்கொள்ளப்படும். தோ்தல் முன்னேற்பாட்டுப் பணிகளில் இது முக்கியமான நடைமுறையாகும்.
இந்த சோதனையின்போது, முந்தைய தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவிகளில் எஞ்சிய தரவுகள் முழுமையாக நீக்கப்படும். சோதனை நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியானவை என குறிக்கப்பட்டு சீலிடப்படும்.
உத்தர பிரதேசத்தில் தொடா்ந்து 2-ஆவது முறையாக பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. 2029-இல் மக்களவைத் தோ்தல் நடைபெறும் நிலையில், உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் வெல்வது அரசியல் கட்சிகளுக்கு முக்கியமானதாகும். உத்தரகண்ட், மணிப்பூா், கோவா ஆகிய மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் உள்ளதால், இத்தோ்தல்கள் அக்கட்சிக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

